சாதகம் – சிறுகதை கடிதங்கள்

அருள்

சாதகம் கதையை இன்று தான் படித்தேன்,

மூன்று தலைமுறை பெண்களை மெல்லிய அங்கதத்துடன் வெளிப்படுத்தும் நல்ல சிறுகதை. கதைச்சொல்லியின் நுண்ணிய அவதானிப்புகள் வழியே இரண்டு தலைமுறை பெண்களின் முரண்களை காட்டுகிறது. இருவரும் உறவுகளை வாழ்கையாக கொண்டிக்கும் போதே அம்மா மகனின் மங்கலத்தை கிழவி குறித்த பதட்டத்துடன் எதிர்கொள்கையில், கிழவி கல்யாண தேதி குறித்து வைத்து அடுத்த பேரப்பிள்ளைகள் குறித்த கனவுகளுடன் உறுதியாக வெளிப்படுகிறாள். 

கதைச்சொல்லி மூன்றாம் தலைமுறையின் விடுதலையுணர்வுடன் வெளிப்பட்டு இயல்பாக இருவரையும் அவதானிப்பதையும் அதை மீறி உணர்ச்சி மேலெளும் மெல்லிய தருணங்களும் கதைக்கு பலம் சேர்ப்பதாக உணர்கிறேன். 

வாழ்த்துக்கள்.

தேஜஸ்

உங்கள் சாதகம் சிறுகதையை இன்று இரண்டாம் முறை வாசித்து முடித்தேன். “சுருக்கங்களை நீவி விட்டால் நீண்டு விடுவாளோ என்று தோன்றியது.” என்று முதலில் வரும் வரி என்னை மிகவும் கவர்ந்தது. கதை வந்த ஓரிரு நாட்களிலே படித்து முடித்திருந்தாலும் அதை குறித்து என்ன சொல்வது என்று சரியாக தெரியவில்லை. முதல் வாசிப்பில் மிகவும் சாதாரண, வெறும் காட்சிகளும் செய்திகளும் வழியாக நகரும் கதையோ என்று தோன்றியது ஆனால் அதே சமயம் அதை தாண்டி கதைக்குள் எதோ ஒன்று இருக்கு என்று உறுத்தியபடியே இருந்தது. மேல் சொன்ன வரியை போல் சுருக்கங்களுக்குள் ஒழிந்துருக்கும் அம்மாயி போல கதையை சற்று விரித்து பார்த்தால் காலாதீதமான ஒன்று அங்கே காட்சி அளிக்கிறது. நம் மரபில் முதியவர்களை கிட்ட தட்ட இறைக்கு சமமான இடத்தில் இருத்தி வழிபடுகிறோம். சாஸ்திரங்களில் ஒரு வைத்தியனுக்கும், அரசனுக்கும் நிகரான இடத்தில் மூத்தவர்களை நிறுத்திகிறார்கள். ஆனால் வயதுக்கு ஏன் இத்தனை மரியாதை ? நமக்கு சில வருடங்களுக்கு முன்பு பிறந்த கழுதை என்பதாலேயே சிறந்த கழுதை ஆகி விடுமா என்ற கேள்வி தான் எனக்கு எழும். ஆனால் காலம் என்பது இயறக்கையின் மா பெரும் சக்தி, இன்னும் சொல்ல போனால் பிரபஞ்சத்தின் அடிப்படை சக்தியே அது தான் என்று தோன்றுகிறது. ஒரு வகையில் நாம் வாழ்க்கை என்று அறிவதே வெறும் காலத்துடன் நாம் மல்லுக்கட்டுவது தானே. அந்த காலத்தை எதோ வகையில் வென்றவர்களை இறைக்கு சமமாக நிறுத்துகிறோம். காலத்தை வென்றதாலேயே காவியங்கள், கலை படைப்புகள் முதலியவை தன்னை அறியாமல் தெய்வ தன்மையை அடைகிறது. அவ்வாறு காலத்துடன் பொருதி ஒருவித காலாதீத நிலையை அடைந்த அம்மாயியை வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து பார்க்கும் கதை சொல்லி, அவளுடைய தாய் முதலியவர்களின் கண்கள் வழியாக மிகவும் நேர்த்தியாக காட்டுகிறீர்கள். ஒரு சிறுமியாக மரணத்தை கண்டு அஞ்சியவளாகவும் அதற்கு எதிர் துருவமாக சாவு வந்து தொலைந்தால் பரவாயில்லை என்று காத்திருக்கும் அம்மாவுக்கும் நடுவில் கதை சொல்லி ஒரு சமன் நிலையில் நின்று பார்க்கிறாள். அவளுடைய அந்த சமநிலையான அந்த நோக்கு ஒரு முக்கியமான கேள்வியை முன் வைக்கிறது – நாம் கொண்டாட்டம் துக்கம் என்று அறிவது எல்லாம் வெறும் காலத்திற்கு எந்த பக்கம் நிற்கிறோம் என்பது மட்டும் தானா ? ஆனால் இயற்கையின் அழகு என்பது துளியிலும் முழுமை கொண்டிருப்பது தான். ஒரு துளி கடல் நீர் முழுக்கடலுக்கு எவ்வகையிலும் குறைவு இல்லை. அதை போல காலத்தின் பிரம்மாண்டத்தை பேத்தியும் மகளும் அவரவருக்கு உரிய முறையில் ஒரு பக்கம் கையாள அம்மாயி இப்பொழுது எனும் பெரும் நிகழ்வில் திளைக்கிறாள். எந்த கவலையும் இல்லமால் கல்யாண ஏற்பாடும் அடுத்த பேர பிள்ளைகளை பற்றிய சிந்தனையாகவும் இருக்கிறாள். கதையின் உச்சமாக அதை கருதுகிறேன். 

இந்த காலம் எனும் பெரும் நெசவில் அலங்காரங்களாக திகழும் விதமாக அம்மா பாட்டி சண்டை, அதில் கதை சொல்லியின் நிலைப்பாடு, அம்மாயி இழப்பையும் அன்பையும் கையாண்ட விதம் என மிக அழகாக வர்ணித்து இருக்கிறீர்கள். இத்தனை சொல்லியும் பாட்டிகளுக்கே உரிய முறையில் சிரித்த படியே மிகவும் ஆழமான செய்திகளையும் சொல்வது போல அங்கதமும் மகிழ்வும் நிறைந்த தொனியில் வரும் இந்த கதையை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது. இதை எழுதியதற்கு நன்றி. மேலும் கதைகளை வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

கடலூர் சீனு

சாதகம் வாசித்தேன்.

அபாரமான கதை. மரணம் நோக்கி குறுகி குறுகி சென்று இறுதியில் வாழ்வை நோக்கி திறக்கும் கதை.

வாசிக்கையில் உணர்வு நிலை

இறுகி இறுகி சென்று

இறுதியில்

முறுக்கம் தளரும் போது கிடைக்கும்

ஆசுவாசம்…

அபூர்வமான தனித்துவம் கொண்ட வாசிப்பு இன்பம் இது.

எதிர்காலத்தை நோக்கி தனது வாரிசுகளை தள்ளும்

இறந்த காலத்தை நோக்கி தனது அம்மாவை தள்ளும் 

அந்த அம்மா இரண்டு காலத்துக்கும் நடுவில் நின்று இரண்டு காலங்களையும் இரு எதிர் திசையில் தள்ள முனைகிறாள்…

அம்மாச்சியோ

அவள் வாழும்போது காலத்தை முன்னே இருந்து இழுக்கும் என்ஜின் போல இழுத்து செல்கிறாள்…

இப்போது அவள் உயிர் பின்னே இருந்து தள்ளும் என்ஜின் போல தள்ளி செல்கிறது.

நீ (அந்தி மற்றும் சாதகம்) கதைகளில் (ஏற்பு தன்மை கொண்ட) வாழ்வின் ஆசுவாச தருணங்களை அந்த ஆசுவாசம் அவ்விதமாகவே வாசகர் மனதுக்குள் செல்லும் வண்ணம் உணர்வுகளை மீட்டுகிறாய்…

இந்த கதை கொண்ட கலை அழகும் அது அளிக்கும் உணர்வு நிலையும்

எல்லோருக்கும் விளங்கி விடும் ஒன்றல்ல… தொடர்ந்து எழுது 

Leave a Reply