சாதகம் – சிறுகதை

grayscale photo of an elderly woman
Photo by Meesala Narendra on Pexels.com

கட்டிலில் பாதி அளவே இருந்தாள். சுருக்கங்களை நீவி விட்டால் நீண்டு விடுவாளோ என்று தோன்றியது. ”நல்லாக்றீங்களா?” என்றதற்கு, எங்கோ பார்த்து ”ஆங் நல்லத்தான இருக்குறேன் போ” என்று சிரித்தாள். பொன்னாத்தா கிழவிக்கு வயது தொன்னூற்று ஒன்று. நடமாடிக்கொண்டுதான் இருக்கிறாள். அம்மா என்னிடம் கூறிய கணக்குப் படி பார்த்தால் எந்தத் தடையமும் தெரியவில்லை.

நான் ஊருக்கு வந்து ஆறு மாதங்கள் இருக்கும். எனவே அம்மாவிடம் பல குடும்ப, அ-குடும்ப கதைகள் வைப்பில் இருந்தன. சாப்பிட்டுக் கொண்டே ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தேன். அம்மாவின் உருண்டைக் குழம்பு ருசி வேறு ஒரு பக்கம் மயக்கிக் கொண்டிருந்தது. எத்தனை முறை வைத்தாலும் எனக்கு அந்தச் சுவை கிடைக்கவில்லை. இல்லை, வேண்டாம்… எப்படிச் செய்தாள் என்று கேட்டால், நீண்ட நேரம் பேசுவாள்.

”கேளு, உன்ற அம்மாயி அன்னிக்கு சொல்றாங்கோ, நா இப்போதைக்கு போகமாட்டேனுட்டு.” அம்மாயி எந்த ஜோசியரிடம் தனியாக விசாரித்திருப்பாள் என்று தோன்றி சிரித்துவிட்டேன். “சிரிக்கிறா பாரு, உனக்கு என்ன, சிரிப்பாத்தான் இருக்கும். எம்பாடு எனக்குதான தெரியும். என்ன கவனிக்கறக்கே எனக்கு மொடையா இருக்கு. என்ற்ற அம்மாவ வெச்சுகிட்டு மிச்சமிருக்குற உசுரும் போயிரும் பொலருக்குது.” என்று அலுத்துக் கொண்டாள். வழக்கம் போல பாவம் என்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டிருந்தேன்.

கிழவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறு வயது முதலே எங்கள் வீட்டில்தான் அதிகம் இருந்தாள். மாமா வீடு கரூரில் இருந்தாலும் அவர்கள் சற்று ஏழ்மையில் இருந்தார்கள். எனவே, நீண்ட நாள் தங்காமல் இரண்டு மூன்று மாதங்கள் தங்கிவிட்டு வந்துவிடுவாள். என் அம்மா இரண்டு பிள்ளைகள் பெற்ற சமயத்தில் ஒத்தாசையாக இருந்ததால், அப்பாவும் ஒன்றும் சொல்லவில்லை.  அம்மாயிக்கு பென்சன் பணமும் இருந்தது. எனவே சீர் வைப்பதில் எந்தக் குறையும் இல்லை. அதிகமாகவே எங்கள் வீட்டிற்குச் செலவு செய்வார். அவளுக்கு நாற்பது வயதிருக்கும் போதே தாத்தா பாம்பு கடித்து இறந்துவிட்டார்.

ஆனால், அம்மாவுக்கும் அம்மாயிக்கும் சிறு வாக்குவாதங்கள் நடந்துகொண்டே இருக்கும். சிறு வயதில் நான் எப்போதும் அம்மாயி பக்கம் தான். வளர வளர இது அதிகாரப் போராட்டம் என்பது கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. முதல் முறையாக அம்மாவின் பக்கம் ஒரு நாள் நின்றேன். அம்மாயியிடம் சிறு அதிர்வு தெரிந்தாலும், அவள் என்னிடம் எந்தவிதத்திலும் விளக்க முயற்சிக்கவில்லை. நான் அவளுக்கு ஒரு பொருட்டேயில்லை என்று அப்போது புரிந்தது. கிழவியிடம் அதன் பிறகு ஜனநாயகத்தனமான உரைகளை ஆற்ற முயற்சித்தேன். “அட இவளே, உன்ற ஆத்தாளுக்கு என்ன தெரியூங்ற, செல்லமா வளந்துபோட்டா. என்ன செய்யோனும், எப்படி, எப்ப செய்யோனுங்கறதேல்லா நா சொன்னாத்தான் தெரியும் ஆமா.”

அம்மாயியிடமிருந்து கொஞ்சம் விலக ஆரம்பித்த வயதிலும் அவளை என்னால் வெறுக்க முடியவில்லை. அவளிடம் இருக்கும் கம்பீரமும், நகைச்சுவை உணர்வும், எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத உதாசீனக் குணமும் எனக்குப் பிடிக்கும். சிறிய நெற்றியும் குச்சி குச்சியான முடியும் கொண்டிருப்பாள். கண்கள் மிகச் சின்னதாக இருக்கும். சிரிப்பு மட்டுமே அவள் முகத்தைத் துலக்கமாகக் காட்டும். அப்போது அவளது நீளமான பற்களும் பெரிய உதடுகளும் முகத்தை நிறைக்கும். எனக்கு ரொம்பவும் செல்லம் கொடுப்பாள்.  அவள் கரூரில் இருந்து வரும் போதெல்லாம் எனக்கு வளையல்கள், பேனா, பென்சில், ரப்பர் என்று பலவற்றையும் வாங்கி வருவாள். ரயிலில் விற்கும் புத்தகக்காரனிடம் கூட பேத்தியைப் பற்றிய பிரதாபங்களைப் பாடி, அவனிடம் இருக்கும் அரிய முப்பது நாளில் இந்தி, இந்திய நாட்டின் பொக்கிக்ஷங்கள் ஆகிய நூல்களை வாங்கி வருவாள்.

சாப்பிட்டு முடித்து அவளிடம் சென்று பேசினேன்.

”கண்ணு தெரியுதா?”

“ஏதோ தெரியுது. இனிமே பாத்து என்ன செய்ய? நம்ம சொல்றதா நடக்குது”

“செரி, செரி. வேரென்ன விஷேசம்”

”உன்ற புருசன் நல்லாக்குறாங்ளா? நல்லா குடும்பம் நடத்தோனும். அது தான் நமக்கு வேனும்…”

“அவரு நல்லாதான் இருக்காரு. வேல சாஸ்தியாப்போச்சு. இப்போ புது டீம்ல வேலை. அதான் வரமுடீயலீன்னாரு”

“அ… ஆங். வேல தான் போ”

“நீ எப்படி கண்ணு இருக்குற. தோலெல்லா வறண்டு போயிருக்குது பாரு” என்று கன்னத்தை வருடினாள்.

தொண்டை அடைத்தது. அவளின் ஏதோ ஒரு செயல் எப்போதும் அவளின் இல்லாமையை நினைவுப்படுத்திவிடும்.

சிறு வயதில் அவளுடனே எப்போதும் உறங்குவேன். அவள் அணைப்பு அந்த நாளின் அனைத்திலிருந்தும் என்னை விடுவிக்கும்.  அவளா, அவளது நைந்துபோன காட்டன் சேலைகளா? தெரியவில்லை. அவள் ஊரில் இல்லையென்றாலும் அவள் புடவையுடன்தான் தூங்குவேன். தூங்கும் போது, அவள் மூச்சு கேட்கிறதா என்று பலமுறை சோதித்ததுண்டு. என் மீதிருக்கும் அவள் கை கணக்கும் போது அவள் இறந்துவிட்டாள் என்று பீதியடைந்திருக்கிறேன். அவளைப் பல முறை தூக்கத்தில் இருந்து எழுப்பியிருக்கிறேன், மூச்சு நிற்கவில்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ள. அப்போதே அவளுக்கு வயது அறுபத்தைந்திற்கு மேல் இருக்கும். உயிரற்ற அவளது உடல் என்ற எண்ணம் எனக்குப் பெரும் தவிப்பை ஏற்படுத்தும். அவளது இறுதி ஊர்வலத்தை எண்ணி கண்ணீருடனும் உறங்கிப் போயிருக்கிறேன்.

அம்மாயியின் சாதகம் பலமுறை பார்க்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை, ஒரு ஜோசியர், அம்மாவிடம், “தற்கொல பண்ணிருக்க வேண்டிய சாதகம் இது. நெம்ப உறுதியானவங்க உங்க அம்மா. அவருக்கு பீஷ்மரப் போல நீண்ட ஆயுள் உண்டு,” என்று சொல்லியிருக்கிறார். அம்மாவுக்கும் அம்மாயி மீது பெருமைதான். “பாத்தியா என்ற அம்மா எப்படி கால்லாட்டம் இருக்குறா. என்ற்ற அப்பன் எறந்தாலும் என்ன படிக்க வெச்சு கல்லாணம் பன்னிக்கொடுத்துருக்குறா. ஒரு ஆள்ட கோட கையேந்தி நின்னதில்ல அவ,” என்று சொல்லியிருக்கிறாள். அம்மாயி சீக்கிரம் சாக மாட்டாள் என்ற எண்ணம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அம்மாயிக்கு வயது ஏற ஏற அம்மாவுக்கும் வயது ஏறியது. இருவருக்கும் சண்டைகள், புலம்பல்கள் அதிகமாயின. “உன்ற அம்மாயி என்னிக்கு ஒழியுதோ அப்பத்தான் எனக்கு நிம்மதி” என்று கொண்டையை முறுக்கிச் செருகியபடி அம்மா என்னிடம் கொதித்திருக்கிறாள். நானும் சமாதானப் புறாவாக இருந்து ஓய்ந்து போய்விட்டேன். ஒருமுறை அம்மாயிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மீண்டும் அவள் மீது பாசம் அதிகமானது. அம்மாவின் பக்க நியாயங்களைக் கேட்டுக்கொண்டாலும் என் கட்சி எப்போதும் சற்று ஒருபக்கமாகவே சாய்ந்திருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அம்மாயி வயதை ஒத்த உறவினர்கள் இறந்து போனார்கள். அதை அவள் எப்படி எடுத்துக்கொண்டாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதை விட கொடுமையாக என் மாமாவும் திடீரென்று நெஞ்சு வலியில் இறந்து போனார். அம்மாயிக்கு அவர் நேரடி மகன் இல்லைதான். அப்புச்சியின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் அவர். அவருக்கு ஏழு வயதிருக்கும் போது அவரது அம்மா காலராவில் இறந்து போனார். எனவே என் அம்மாயியை அவளது இருபத்து ஒன்றாம் வயதில் முப்பத்தி ஆறு வயதான அப்புச்சிக்குக் கட்டிக் கொடுத்தனர்.  மாமாவின் இறப்பு ஒருவிதத்தில் அவள் இறப்புதான். ஆனாலும் அவள் அதை காட்டிக்கொள்ளவில்லை. இரண்டு வருடம் முன்பு கொஞ்சம் நினைவு தப்பியபோது மகனைப் பற்றியே உளறல் இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் கிழவி ஆச்சரியமூட்டும் படி மீண்டு தன் ‘இயல்பு நிலைக்கே’ வந்துவிடுவாள்.

அவள் ஒரு வித மாறாத சிலை போலாகிவிட்டாள். வீட்டின் கல்யாணங்கள், பிறப்பு, சடங்கு, படிப்பு, வெளிநாட்டுப் பயணம் எல்லாவற்றிற்கும் அவளது அருள் வாங்கிச் செல்லப்படும். என்ன ஏது என்று கேட்டு ஒருவித குழப்பத்துடன் ஆசி வழங்கி வைப்பாள். அம்மாவும் இப்போது ஒருவழியாக அம்மாயியின் அமரத்தன்மையை உணர்ந்துவிட்டாள். அவ்வப்போது புலம்புவது நடக்கும். ஆனால் அவளுக்கு உறுதி அளிப்பது இரண்டு வருடத்திற்கு முன்பு பார்த்த ஜோசியம் தான். “தசாபுத்தி கொஞ்சம் வீக்கா இருக்குதுங்க. ஆத்மா கொஞ்சம் மங்கலடையறது தெரியுது. இன்னும் ஒன்னு ரெண்டு வருசத்துல நடந்துரும்னுட்டு நம்பலாம்”

அம்மா எல்லா செயலையும் அதை வைத்தே திட்டமிட்டாள். தம்பியின் கல்யாணம், குலதெய்வ நேர்த்திக்கடன் ஆகியவை இந்த இரண்டு வருடத்திற்குள் அல்லது மூன்று வருடத்திற்குப் பிறகு, தீட்டு போனபின் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இரண்டு வருடம் முடிந்து இப்போது நான்கு மாதமாகிறது. தம்பிக்குப் பெண் அமையும் தருவாயில் இருக்கிறது. ஆனால் கிழவி பற்றிய முடிவின்மை அம்மாவுக்குப் பலத்த குழப்பத்தை அளித்தது. “நல்ல காரியம் கூடி வரும் போது என்னாகுமோனுட்டு பயமா வருது போ” என்றாள். “நீ எதையும் போட்டு கொழப்பிக்காம ஜாலியா ஆக வேண்டியத பாருமா” என்றேன். 

ஆனால், எனக்குமே சற்று கவலை தொற்றிக் கொண்டது. அம்மாவின் கவலைபோல் இல்லை. என் சிறு வயது கவலை. உயிரற்ற அவளது உடல் இப்போது அவ்வளவு திகிலை எனக்கு அளிக்குமா என்பது சந்தேகமே. ஆனால் அவளது இறப்பு அத்தனை எளிதாக கடக்கக் கூடிய ஒன்றா? நானும் அந்த அரிய நிகழ்வை எதிர்பார்க்கும் மன நிலைக்கு வந்துவிட்டேனா? சாதாரணமாக பேசிச் சிரிக்கும் அளவிற்கு அவளது உயிர் ஆகிவிட்டதா? எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்று, குறிப்பிட்ட காலத்திற்குள் நடந்தால் மட்டும்தான் அதிர்ச்சி அடைவது போல் நடிப்பார்களா? ’நான் அதை எதிர்பார்க்கவில்லை’, என்று ஒருவர் இறந்து போன பின் கூறுவதன் அபத்தம் என்னை ஒரு நொடி கூசச் செய்தது.

என் மனதின் இந்த நாடகங்களை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். எத்தனை முயன்றாலும், அம்மாவின் கணிப்புகளை நானும் மனதில் நம்பிக்கொண்டிருந்தேன். கிழவியின் இறப்பு எனக்கு எந்த இழப்பையும் அளிக்காமல் போய்விடும் என்று கூசினேன்.

இரண்டு நாட்கள் கழிந்தது. அம்மாவுக்கு ஏனோ ஆற்றாமை அதிகமாகிக் கொண்டே போனது. இத்தகைய சமயத்தில் அவளின் ஒரே தஞ்சம் ‘கொங்கு நாட்டு மங்கள மாரியம்மன் ஜோதிட நிலையம்’ தான். நான் இதுவரை அம்மாவுடன் சென்றதில்லை. இம்முறை சென்றேன். செந்தில் ஜோசியருக்கே அறுபது கடந்துவிட்டது. நான் பொது விழாக்களில்தான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவரது ஜோதிட மொழியில் வேறு ஒருவராக தெரிந்தார். அம்மா அவரிடம், “நல்ல காரியத்தப்போ எதாச்சும் தடை வந்துருமோனுட்டு பயமா இருக்குங்துங்க சாமி” என்று தன் எப்போதைக்குமான கேள்விக்குச் சாக்கு சொன்னாள். சோதிடரும் முதல் முறை கேட்பது போல, அவளின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்டதாகப் பதிலளித்தார். ஆனால் அவர் சாதகத்தைப் பார்த்ததாகவே எனக்குத் தெரியவில்லை. “நாம முன்னாடி கணிச்சது இப்பவும் பொருந்தும். சனி மாரக ஸ்தானத்துல தான் இருக்காரு இப்போ. நீங்க கவனிச்சீங்க நா தெரியும். அவங்க முன்னவிட இப்பொ தளர்ந்திருப்பாங்க. ஆனா உங்க பையனோட சாதகத்த வெச்சு பாத்தா அவரோடெ கல்யாணத்துக்கு ஏதும் தடவராதுனு தான் தோனுது” என்றார்.

அம்மா எதற்கு சந்தோசமடைந்தாள் என்று எனக்குப் புரியவில்லை.

”செந்திலாண்டவன் புண்ணியத்துல பதில் கெடச்சது சாமி” என்று சற்று நெகிழ்வுடன் கிளம்பினாள். அவளது முகம் தெளிவடைந்து கொண்டே சென்றது. வீட்டிற்கு வந்திறங்கியவுடன் அம்மாயி எங்கள் இருவரையும் அழைத்தாள்.

“கோவிலுக்கு போயிட்டு வந்தீங்களாக்கும்”

“ஆமா மா, தம்பிக்கு நல்ல முறையா கல்யாணம் நடக்கொனும்னு வேண்டுதல போட்டுட்டு வந்தோம்”

“செரி, செரி, வேண்டுதலோட ஆக வேண்டிய காரியங்களையுங் பாக்கோனும்.  வர பங்குனி மாசம் 18 ஆம் தேதி நல்லார்க்கு. சத்யாவ காலண்டர்ல பாத்து படிக்க சொன்னேன். அன்னிக்கு முடிச்சிறலாம். அதுக்கப்பறம் புதுப்பொண்னோட கொலசாமி கோயிலுக்கு போயிட்டு வாங்க”

“அதேல்லாம் நாங்க பாத்துக்குறோம். நீ உசுர பிடிச்சு வெச்சிகிட்டு உன்ற பேரன் கல்யாணத்த பாரு ஆமா”

”ஆகட்டும் ஆகட்டும். நானெங்க போப் போறேன். இன்னும் ரெண்டு பேர புள்ள இருக்கே,” தன் வயிறு உள்ளிளுக்க, மிஞ்சியிருந்த அவளது நீளப் பற்கள் தெரிய சிரித்தாள். பிறகு சட்டென்று தன் சிலை முகத்திற்கு மீண்டு மெல்ல நடந்து உள்ளே சென்றாள்.

அம்மாவின் அப்போதைய மன ஓட்டத்தை என்னால் கணிக்க முடியவில்லை.

(மறுபிரசுரம் – வல்லினம் ஜனவரி 2026 இதழில் வெளியானது)

Leave a Reply

Discover more from saaradhai.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading