சமீபத்தில் வெள்ளிமலையில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தோம். என் புலன்கள் மகிழ்ந்து நன்றி கூறியதை அந்த நாட்களில் உணர்ந்தேன். மனம் அத்தனை அமைதியும் ஒருமையும் கொண்டிருந்தது. அருகில் ஒரு கல்யாணம். சினிமா பாட்டாக ஓடிக் கொண்டிருந்தது மட்டும் சற்று சலிப்படைய வைத்தது. ஆனால் மாலை ஒரு அழகிய வாத்திய இசை கேட்டது. ’ராமன் ஆண்டாலும்’ என்ற பழைய ரஜினி பாடலின் தொடக்கத்தில் வரும் அந்த இசைக்கோவை போன்றது. காலம் கடந்த உணர்வில் சிறிது நேரம் அமிழ்ந்திருந்தோம். இரவு அந்தியூர் மணியுடன் நானும் அஜியும் பேசிக்கொண்டிருந்த போது, இயல்பாக அவரகளது சடங்கு, வாழ்க்கை முறை, அருகில் இருக்கும் மிக தனித்த கிராமங்கள் என்று பேசி இயல்பாக காட்டு விலங்குகள் பற்றிய பேச்சில் வந்து சேர்ந்தது.

காட்டு விலங்குகள் பற்றிய புரிதல் நகர்புற வாசிகளான நமக்கு முற்றிலும் வேறுவிதமானது. தவறானது என்று கூட சொல்லலாம். ஏனெனில், நாம் அதை காண்பதை ஒரு சாதனையாக கொண்டு ஆர்ப்பரிக்கிறோம். பிறகு அதை ஒரு கொடிய உயிரினம் என்று சித்தரித்து அதில் இருந்து தப்பியதாக எண்ணி ஒரு சாகச உணர்வை அடைகிறோம். ஆனால், அதன் அருகாமையில் வாழும் மக்களுக்கு அது தங்கள் வாழ்வின் ஒரு அங்கம். மணி ஒரு சம்பவம் சொன்னார். ஒருவர் இரவில் காட்டில் சென்று கொண்டிருந்த போது, மனிதன் ஒருவன் எதிரில் வருகிறான் என்று எண்ணி ’நேரம் என்ன?’ என்று கேட்டிருக்கிறார். ஆனால் எதிரில் வந்தது ஒரு கரடி. அது இவரை தாக்கியிருக்கிறது. அவரது உடலில் அதன் தாக்குதலின் ஆழ்ந்த வடுவுடன் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எனக்கு இது சிலிர்ப்பை அளித்தது. மனிதனைப் போன்ற ஒரு உருவம். ஆனால் அதன் உள்ளம் வேறுவிதமானது. தூயது. அது தாக்கியதற்கு முக்கிய காரணம், அதற்கு கண் பார்வை மங்கலானது. அது மனிதனின் மொழியை அறியாதது. அதே போலவே அவர்கள் யானையை அனுகும் விதமும். சமீபத்தில் ஒரு யானை தாக்கி இளைஞர் ஒருவர் இறந்துவிட்டார். அந்த செய்தியை அவர்கள், நம் நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்து கொண்ட போது அந்த துக்கத்தை எந்தவித கொந்தளிப்பும் இல்லாமல் இறந்தவரின் படத்தை காட்டி யானை கொன்ற விதத்தை விவரித்திருக்கிறார்கள். அவர்கள் அதை எடுத்துக்கொண்ட விதம் ஒரு அறிதலை எனக்களித்தது. அவரது சாவு இயற்கையால் நிகழ்ந்த மரணம், மனித சக்தியை மீறியது என்ற எண்ணத்தில் இருந்து வரும் புரிதல் அது. இயற்கை பேரிடரால் நடக்கும் மரணம் அளிக்கும் அதே உணர்வு. மனிதன் என்னும் சிறிய உயிரினத்தின் எல்லைகளை உணர்ந்து நாம் அடையும் பணிவு. அதே சமயத்தில், யானைக்கும் மனிதனுக்குமான உறவைப் பற்றி நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்கிறோம். அதனை காயப்படுத்துதல், காரணமின்றி அதை துரத்தி பயமுறுத்துதல் ஆகியவை மனிதனின் ஆணவத்தை, அவனின் தீராத வேட்கையை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது.
சமீபத்தில் கண்ட மியாசாக்கியின் ‘Princess Mononoke’ படமே மேற்கண்ட இந்த நினைவுகளை கிளர்த்தியது. மியாசாக்கியின் படங்கள் எப்போதும் ஒரு தியான அனுபவத்தை அளிப்பவை. அவரது ’My Neighbour Totoro’ மற்றும் ‘Porco Roso’ ஆகிய படங்களை பார்த்திருக்கிறேன். மிக அழகிய மனதை மலரவைக்கும் அனுபவங்கள். ஆனால், இந்த படம் மிக அரியதொரு அனுபவமாக இருந்தது. யதார்த்தமும் மாயத்தன்மையும் இணையும் ஒரு நுண்ணிய புள்ளி படத்தின் ஆத்மாவாக இருந்தது. அவரது எல்லா படங்களிலும் இயற்கை சார்ந்த பேசுபொருள் இருந்தாலும் இந்த படத்தில் இயற்கையும் மனிதனும் அடைய வேண்டிய பரஸ்பர புரிதல் பற்றி பல வகையில் சிந்திக்கிறது. இதன் சமூக அரசியல் கூறுகள் கதையை மிக சுவாரஸ்யமாக்கி நம் நிகழ்காலத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க வைக்கிறது.

படத்தில் வரும் ஆஷிடாக்காவின் கதாபாத்திரம் எபோஷி என்ற பெண்ணின் தலைமையில் இயங்கும் ஒரு கிராமத்திற்கு செல்கிறான். ஆஷிடாக்கா தன் சாபத்தை தீர்க்க அங்கு வந்திருப்பான். அந்த கிராமம் இரும்பு மற்றும் இரும்பால் ஆன ஆயுதங்களை செய்யும் கிராமம். அங்கு ஆண்களும் பெண்களும் விடுதலை உணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருவார்கள். ஆனால் அவர்களது ஆக்கிரமிப்பால், காடும் காட்டு விலங்குகளும் அழிக்கப்படும். எபோஷி சுட்ட ஒரு பன்றி, ராட்சதனாக மாறியே ஆஷிடாக்காவை தாக்கியிருக்கும், அதனால் தான் அவனுக்கு அந்த சாபம் கையில் தழும்பாக மாறும். அந்த சாபத்தின் காரணத்தை உணர்ந்த ஆஷிடாக்கா இந்த சம நிலையின்மையை எப்படி தீர்த்து வைக்க முயற்ச்சிக்கிறான், தன் சாபத்தில் இருந்து மீண்டானா என்பதே கதை. இதில் மொனொனோகே என்ற காட்டின் இளவரசி, தன் ஓநாய் பெற்றோர்களின் உதவியுடன் எபோஷியை கொல்லும் முயற்ச்சியில் ஈடுபடுவாள். அவள் ஆஷிடாக்காவையும் ஒரு மனித எதிரியாகவே பார்ப்பாள். ஆனால், ஆஷிடாக்கா இரண்டு பக்கமும் தன்னால் இயன்ற வரையில் சமாதானம் செய்யும் செயல்களில் ஈடுபடுவான். எபோஷிக்கு காட்டின் முக்கியத்துவத்தை புரிய வைக்க முயற்சி செய்வான்.
கதையின் இந்த சமநிலையும் யதார்த்தமும் அதை காலத்தை கடந்த படமாக ஆக்குகிறது. அதே சமயம் இந்த படத்தின் மாயத்தன்மை வாய்ந்த கூறுகள் மிக ஆழமாகவும் ஜப்பானிய தத்துவத்திற்கு நெருக்கமாகவும் இருக்கிறன்றன. குறிப்பாக, காட்டின் தூய ஆவி (Forest spirit) என்று அழைக்கப்படும் ஒரு எல்க் வடிவ மிருக தெய்வம் மிக கம்பீரமாக காட்சியளிக்கும். அதன் தலையை எபோஷி சுடும் சமயத்தில் அதன் முகபாவனை மிகவும் சிலிர்படையச் செய்தது. மனிதனின் செயலில் இறைவன் திகைத்து நிற்பது போன்ற ஒரு பார்வை. அதே சமயம், கண்களில் பரிவு கலந்த புன்னகை. முதல் காட்சியிலும் இறுதி காட்சியிலும் வரும் ராட்சத பன்றியின் காட்சிகளும் பதற்றமுறச் செய்யும் வகையில் மிக பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சிறிய ஆயிரக்கணக்கான அழகிய மரதேவதைகள் அஷிடாக்காவுடன் நம்மையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சென்றது இனிமையான தருணம்.

படம் முழுக்க வரும் இந்த மாயாதீதமான காட்சிகள் அதன் படமாக்கலின் முக்கியச் சிறப்பு எனலாம். அதைப் பற்றி தேடிப் படித்த போது சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைத்தது. இந்த படத்தில் தான் மியாசாக்கி முதன் முதலாக தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார். முக்கியமாக காட்டின் மாயத்தன்மையை காட்டவும், காட்டு விலங்குகளின், தெய்வங்களின் வேகமான அசைவுகள், ராட்சத பன்றியின் அசைவுகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகான ஸ்டூடியோ ஜிப்லி திரைப்படங்களில் தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்ந்தது. 1997 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் மியாசாக்கி இந்த முடிவை எடுக்க எப்படி துணிந்தார் என்று யோசிப்பது சுவாரஸ்யமளிக்கக்கூடியது. தொழில் நுட்பத் துறையில் இருந்த ஒருவரின் பரிந்துரையால் அவர் இதை செய்திருக்கிறார். ஆனால், மைக்ரோசாப்ட்டின் பிரத்தியேக உதவியுடன் முடிந்தவரை இயல்பாக வரையப்பட்டதைப் போலவே மாற்றியிருக்கிறார்கள்.

இந்த தகவல், கடந்த வருட ஸ்டூடியோ ஜிப்லியின் பாணியில் Chat GPT உருவாக்கிய படங்களுக்கு வந்த சமூக வலைத்தள வரவேற்பை நினைவுபடுத்துகிறது. எல்லோரும் அதை பயன்படுத்தி தங்கள் படத்தை ’Cute’ ஆக மாற்றினார்கள். ஒரு சாரார் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். மியாசாக்கியின் உழைப்பைப் பற்றி விவரித்து எப்படி அவர் ஒவ்வொரு அணுவையும் தன் படத்தில் செதுக்கினார் என்று கூறி இந்த AI Trend ஐ விமர்சித்தனர். ஆனால் அவர் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார் என்ற செய்தி அளிக்கும் கேள்வி, அவர் எந்த அளவு பயன்படுத்தினார் என்பதில் சென்று தொடுகிறது. அவர் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு முற்றிலும் ஒரு புதிய அழகியலையோ அல்லது ஒரு புதிய வடிவத்தையோ கூட உருவாக்கியிருக்க முடியும். அனால், அங்கு அவர் அதன் பங்களிப்பை முடிந்த வரையில் மனித உழைப்பினால் வரும் கலையை ஒத்து அதன் சில கடினமான எல்லைகளைக் கடக்க மட்டுமே உபயோகப்படுத்தியிருக்கிறார். அதை நாம் ஒரு முக்கிய கருதுகோளாக நாம் பார்க்க வேண்டும். பல பிற்காலத் திரைப்படங்களில் நாமே பார்த்திருக்கிறோம். ஒரு தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு திரைப்படத்தை செயற்கையாக எடுக்கும் போக்கு அதிகரித்தது. அதீதமான, திகட்ட வைக்கும் டிஜிட்டல் காட்சியோ அல்லது டிஜிட்டல் இசையோ ஒரு குறிப்பிட்ட கால அளவே நீடிக்கிறது.

இந்த திரைப்படம் சார்ந்தே இதை சிந்தித்துப் பார்த்தால், மனிதன் – இயற்கை என்ற இருதுருவ உலகம் இப்போது மனிதன் – இயற்கை – ஏ.ஐ என்ற முக்கோன உலகமாக மாறியிருப்பதாக தோன்றுகிறது. இயற்கையில் இருந்து மனிதன் உருவாகி வந்திருப்பதைப் போல, நம்மில் இருந்து ஏ.ஐ உருவாகியிருக்கிறது. தற்போது இயற்கையின் அதே இடத்தில் நாம் இருக்கிறோம். நம்மில் இருந்து உருவாகிய ஒரு புதிய மாற்றத்தை எதிர்கொள்கிறோம். தொழில் நுட்பத்தின் ஒரு அசாத்தியப் பாய்ச்சலே ஏ.ஐ என்று புரிந்து கொள்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்பு தொழில்நுட்பம் இந்த மூன்றாவது அலகாக இருந்ததா என்று கேட்டால், ஓரளவு மட்டுமே என்று தோன்றுகிறது. ஏனெனில் அது ஒட்டுமொத்த மனித வளர்ச்சிக்கு வழிவகுத்தது. அது மனிதனின் கையில் இருந்த ஒரு கருவியாக மட்டுமே இருந்தது. இப்போது மனிதனுக்கும் இயற்கைக்கும் முற்றிலும் ஒரு நகலாக அமைந்து நம்மை நோக்கி பேசுகிறது ஏ.ஐ.
ஏ.ஐ-ஐ நான் ஒரு பூதமாக இங்கு சித்தரிக்க விரும்பவில்லை. ஆனால், ஏன் தொடர்ந்து அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்? நாம் நம் விருப்பு வெறுப்புகளைக் கடந்து ஏ.ஐ பயன்பாட்டில் தொடர்ந்து உட்படுகிறோம். அது நம் தொழில்நுட்பப் பயன்பாடை மேலும் எளிமையாக்குகிறது. நமது மூளையின் உழைப்பை, அதற்கான நேரத்தை ஓரளவு குறைக்கிறது. அன்றாட செயல்களைச் செய்யும் அளவிற்கு பரவலாக அது வளர்ந்ததாக தெரியவில்லை. ஆனால், நம் தகவல்களை சேகரித்து அதை மீண்டும் பயன்படுத்தி அச்செயல்களைச் செய்ய ஏ.ஐ பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. கம்பெனிகளில் ஊழியர்கள் ஏ.ஐ பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள். நாம் ஏ.ஐ உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கட்டாயம் வந்துவிட்டது. ஒரு புதிய நபருடன் சேர்ந்து வாழ்வதில் இருக்கும் சிக்கல்களையே நாம் இப்போது ஏ.ஐ யிடம் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. இதில் தான் எல்லைப் பிரச்சனை வருகிறது. மனிதன் இயற்கையில் எல்லைகளை நீட்டித்து கொண்டே சென்றது போல இப்போது ஏ.ஐ நம் எல்லைகளை சீண்டிப் பார்க்கிறது.

சமீபத்தில் சுசித்ரா தன் வலைப்பக்கத்தில் புனைவெழுத்தில் ஏ.ஐ பயன்பாடு குறித்த ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஒரு எழுத்தாளர் தன் விழிப்பை (Attention), கவனத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அது ஒரு எழுத்தாளருக்கு நிச்சயமாக தேவையான ஒரு அறைகூவல். அதை யோசிக்கும் போது, ஒரு கணத்தில் மிகப் பெரிய சோர்வானது என்னை சூழ்ந்துகொள்கிறது. ஏனெனில் எழுத்தாளர் சமூகத்தின் ஒரு அங்கம் தான். அவர் தன் புனைவெழுத்து என்ற ஒரு வெளிப்பாட்டில் (expression) ஏ.ஐ பயன்படுத்தவில்லை என்றாலும், அவர் வாழும் இந்த உலகம் ஏ.ஐ யின் கட்டற்ற பிம்பங்களால் அவரை ஏமாற்றுகிறது. ஒரு கானல் நீர் போல. ஒரு மிருகத்தின் கானொளியோ அல்லது இயற்கை பற்றிய கானொளியோ சந்தேகமில்லாமல் பார்க்க முடிவதில்லை. இந்த பிரச்சனை எழுத்தாளர் என்பவரைக் கடந்து ஒரு சாதாரண தனிமனிதனுக்கும் நீள்கிறது. ஆனால், அதில் மேலும் கவலைக்குரிய விஷயம் அந்த தனிமனிதன் அதை எப்படி கையாள்கிறான் என்பதில் தான் இருக்கிறது. ஒரு ஏ.ஐ கானொளியை அது ஏ.ஐ என்று தெரிந்ததும் வரும் கசப்பு அல்லது எரிச்சல் பலபேருக்கு வருவதில்லை. நன்றாக இருக்கிறதே என்று அதை மேலும் மேலும் பார்க்கிறார்கள். இது குழந்தைகளிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. எதையும் அதன் உண்மையான அழகியலோடு பார்க்காமல், அதை பாலிஷ் செய்து பார்க்கும் கண் கொண்ட ஒரு சமூகம் வளர்ந்தால், அதில் ஒரு புனைவெழுத்தாளர் தனித்து நடமாடிக் கொண்டிருப்பாரா?
பிளாட்டோவின் தத்துவ சிந்தனையில் அவர் கலை பற்றி கூறியிருப்பதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். பிளாட்டோ கலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர். ஆனால், அவர் கூறிய கலை என்பது நகலெடுத்தலைக் குறிக்கும். ஒரு உண்மையை அதே போல பிரதிபலிப்பதையே அவர் கலை என்று வகுத்தார்; அது உண்மைக்கு எதிரானது என்றார். ஆனால், எகிப்திய கோவில் வரைகலையில் அவருக்கு மதிப்பிருந்தது. அதன் அழகியல் தனித்துவமாக உண்மையை மேம்படுத்தும் விதமாக ஆழமான அர்த்தங்களை குறிப்பதாக இருந்தது. பிற்காலத்தில் சோப்பனோவர், நிஜமான கலை எப்படி மனிதனை மேம்படுத்தும், அதில் ஒரு கலைஞனின் பங்கு என்ன என்று விரிவாக எழுதியிருக்கிறார் (அவர் கலைஞனை ‘Genius’ என்று அழைக்கிறார்). இங்கு பிளாட்டோ கூறும் அந்த ‘நகலெடுத்தல்’ என்பது ஏ.ஐ தான். அது தனிப்பட்ட ஒரு இருப்பல்ல. உண்மையை பிரதிபலிக்கும் ஆடி மட்டுமே.
கலையில் ஈடுபடுபவர் மனிதத்தன்மையின் ஆதாரத்தை பேணுபவர்கள் என்பதை தன்னளவில் உணர்ந்து, ஒருபடி மேல் சென்று வழிகாட்ட கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பிளேட்டோவின் Cave allegory யில் வருவது போல, ஆடிப்பிம்பங்களை நம்பாமல், வெளியே சென்று பார்த்து உலகை வழிநடத்தும் பெரும் பொறுப்பை சுமப்பவர்களே சிறந்த கலைஞர்களாக முடியும் என்று தோன்றுகிறது.

தனிமனிதர்களின் பங்கு என்று ஒன்று இதில் உண்டா என்றால், தனிப்பட்ட தேடலின் மூலம் கலையின் பக்கம் ஒருவர் வரும்போது, அங்கும் ஏ.ஐ அவரைச் சூழாமல் அவருடைய சுயத்தை மேம்படுத்த கலை அவருக்கு உதவ வேண்டும் என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.
Princess Mononoke யில் வரும் இறுதிக்காட்சியை நினைத்துப் பார்க்கிறேன். எபோஷி எல்க் மிருகக் கடவுளின் தலையைக் கொய்ததும் அக்கடவுள் ஒரு தலையற்ற பெரும் மிருகமாக மாறி தன் தலையைத் தேடி அலையும். அதன் வேட்கை அக்காட்டையே பெருமளவு அழிக்கும். அந்த கிராமத்தையும் அழிக்கும். ஆஷீடாக்காவும் சானும் தலையை திருப்பி மீட்டு அளிக்கும் போது, காடு மீண்டும் புதிதாக உயிர்பெற்றெழும். ஏ.ஐ யிடம் இச்சமூகம் தலையை தொலைத்து நிற்கும் இந்த கட்டத்தில், கலைஞர்கள் அதை தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.
Leave a Reply