மனிதம்

அமெரிக்கா கிளம்புவதற்கு ஒரு நாள் மட்டுமே இருந்தது. எனக்கு சில பொருட்கள் வாங்கவேண்டியிருந்தது. எவ்வளவு திட்டமிட்டாலும் கடைசி நிமிட சுறுசுறுப்பு போல வருவதேயில்லை. அஜிக்கும் அப்படிதான். கடைசி நிமிடத்தில் நன்றாக விரட்டுவான். அவனுடன் சென்றால் என்னால் பொறுமையாக எதையும் வாங்க முடியாது. எனக்கு வேடிக்கை பார்க்கவே பாதி நாள் வேண்டும். எனவே நான் மட்டும் தனியே கிளம்பினேன். அருகில் இருக்கும் பீனிக்ஸ் மால் தான் எங்கள் ஆபத்பாந்தவன். மூன்று மணி நேரத்திற்குள் வந்துவிட வேண்டும் என்பது திட்டம்.

நான் மால் திறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே சென்று விட்டேன். பொதுவாக, மாலைகளில் கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் தான் செல்வோம். எனவே அன்று எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் வேடிக்கை பார்த்ததில் என்னை மிகவும் கவர்ந்தது அங்கிருக்கும் மனிதர்கள் தான். பொதுவாக நான் வீட்டிலேயே தான் வேலை பார்ப்பேன் (work from home). எனவே வெளியே செல்வதென்பதே பலவிதமான உணர்ச்சிகளை அளிக்கும் அனுபவமாக இருக்கும். அதுவும் சென்னை போன்ற நகரத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே மனிதர்களை பார்த்துக் கொண்டே இருப்பதுதான். மாலில் எல்லோரும் அப்போது தான் வேலையை தொடங்கியிருந்தார்கள். விபூதி, குங்குமம், பாண்ட்ஸ் பவுடர், கொண்டைகள், சென்ட், சிகப்பு லிப்ஸ்டிக், வாட்ச், டை, மடிப்பு கலையாத உடைகள். ஐடி கார்டை ஆட்டிக்கொண்டே கால்களை டைல்சில் உரசி அலட்சியமாக நடக்கும் இளம் பெண் ஊழியர்கள், வெட்கச் சிரிப்புடனும் அம்மாவின் தோரணையுடன் நம்மை வேவு பார்க்கும் வயதான பெண் ஊழியர்கள், வேலையில் நான் ரொம்ப கெட்டியாக்கும் என்ற பாவனையில் இன் செய்த சர்ட்டை இழுத்துவிட்டுக் கொண்டு நிற்கும் வயதான ஆண் ஊழியர்கள், முன்னாள் புல்லிங்கோவின் தடையங்களுடன் முடியை நீவிவிட்டுக் கொண்டே திரியும் இளம் ஆண் ஊழியர்கள் என்று நான்கு வகையாக இவர்களை பிரிக்கலாம். காலையில் வரும் வாடிக்கையாளர்கள் வெட்டியாக இருப்பவர்கள் என்று தெரிந்து அவர்கள் அளிக்கும் அரவணைப்பான பார்வை எனக்கு ஒருவித ஆறுதலை அளித்தது. முந்தைய நாள் இரவு சோர்வின் உச்சத்தில் சென்றிருப்பார்கள். ஆனால், இப்போது எல்லோர் முகத்திலும் புன்னகை. மீண்டும் மீண்டும் உதிக்கும் நம்பிக்கை. மனிதர்களை காணும் போது வரும் நம்பிக்கை. வீட்டின் பிரச்சனைகள் உதரப்பட்டு அன்றைய வினையை நோக்கி மட்டுமே தன் விசையை செலுத்தும் உயிரின் புன்னகை அது.

ஒருவழியாக எல்லாம் வாங்கிவிட்டு திரும்பினேன். வீட்டை தலைகீழாக்கி, மூட்டைகளை கட்டி, அதை எடைபார்த்து, கேஸ், ஆர் ஓ வாட்டர் பில்டர் ஐ அணைத்து, வாஷிங் மிசினை கவர் கொண்டு மூடி கடமைகளை செய்த திருப்தியுடன் ஏர்போர்ட் கிளம்பினோம். வீட்டில் இழுத்த மூச்சு ஏர்போர்ட் வளாக விளக்குகளை பார்க்கும் போது பெருமூச்சாக வெளியேறியது. அந்த பெருமூச்சே எப்போதும் பயணத்தின் தொடக்கம்.

கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் பயணித்து ஹாங் காங் விமான நிலையம் சென்றிறங்கினோம். எங்களுக்கு மூன்று மணி நேர ட்ரான்சிட் நேரம் கிடைத்தது. நானும் அஜியும் ஏர்போர்டின் எல்லா பக்கமும் நடந்து சுற்றிக் கொண்டிருந்தோம். ஒரு காபி அருந்தினோம். அப்போது ஹாங் காங்கை சேர்ந்த இரண்டு சிறிய குழந்தைகளைக் கண்டேன். தங்கை பற்களைக் காட்டி சிரித்து குதித்துக் கொண்டிருக்க, அண்ணன் மிக இறுக்கமான முகத்துடன் அவளுக்கு ஏர்போர்ட் நாகரிகத்தை சொல்லிக் கொடுப்பது போல அங்கும் இங்கும் பார்த்து அவளிடம் கிசுகிசுத்தான். எதிரில் ஒரு பெண் ஒரு கைக் குழந்தையை வைத்துக் கொண்டு காபி அருந்திக் கொண்டிருந்தாள். அக்குழந்தை சிகப்பு கண்ணங்களுடனும் பிளந்த வாயுடனும் என்னை நோக்கி கைகளை காற்றில் நீட்டி அளைந்தது. என்ன சொல்கிறது என்னிடம்? மீண்டும் அதே கணம். மனிதர்கள் மட்டுமே அளிக்கும் உணர்ச்சித் ததும்பல். பல விதமான தோல்கள், உடல் வாகுகள், உடைகள், பாவனைகள். வயதானவர்களும் குழந்தைகளும் அதில் ஒருபடி அதிகமாக காலத்தை, அதன் நீட்சியை காட்டிச் செல்பவர்களாக தெரிந்தார்கள். ஒரு ஹாங் காங் பாட்டி கைக் குழந்தையான பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்த போது, நம்மூரில் காணும் அதே காட்சியைத் தானே காண்கிறேன்? என்ன வித்தியாசம்? என்று தோன்றியது. மனது அது வேரொருவர், வேறு விதமான நிறம், வேறு விதமான வாழ்க்கை கொண்டவர், எனவே அவர் நானில்லை என்ற எண்ணத்தை அளிக்கிறது. ஆனால், இத்தகைய மனித உறவுகளை பார்க்கும் போது தான் ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒரே விதமான வாழ்க்கையைத் தான் வாழ்கிறோம் என்று தோன்றியது. நம் தேவைகள் ஒன்றுதான். நம் ஆசைகள் ஒன்றுதான். நம் ஆன்மிகம் கூட ஒன்றுதான். எதிர் நிலைகளைக் கொண்டு உருவாகும் புதிய ஒருமையை நோக்கியே உலகம் எப்போதும் செல்கிறது. மீண்டும் எதிர் நிலைகள் பிறக்கிறது. ஆனால், பயணம் ஒரு திசையை நோக்கி குவியாமல் எங்கும் செல்லமுடியாது. இதுவரை வந்திருக்கவும் முடியாது.

ஹாங் காங் விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா செல்லும் விமானம் மிக நீண்ட நேரப் பயணம். கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரம் பயணித்தோம். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய மகேஷ்வரி எங்களை வரவேற்றார். நியூஜெர்சி விடுதியில் எல்லா நண்பர்களும் எங்களுக்கு முன்பே வந்திருந்தனர். ஒரு நாள் இடைவெளி விட்டு அதற்கடுத்த இரண்டு நாட்கள் வாழும் தமிழ் இலக்கிய விழா நியூயார்க்கில் நடைப்பெற்றது. விழாவைப் பற்றிய சுசித்ராவின் குறிப்பையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மனிதர்களின் முகங்கள் எப்படி அவருக்கு எழுச்சியை அளித்தது என்று எழுதியிருக்கிறார். எனக்கு குறிப்பாக, வெளி நாட்டு வாழ் தமிழர்கள் வாசிப்பை கொண்டு எப்படி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நிறைய பெண்கள் உயிர்ப்புடன் இருப்பதே வாசிப்பினால் தான் என்பதை புரிந்து கொண்டேன். அன்னிய நிலத்தின் வெறுமையை கடக்க இலக்கியத்தை தவிர்த்த சிறந்த வாசல் ஏதுமில்லைதான். எனக்கு, இலக்கியம் ஒரு ஆளுமை வளர்ச்சி சார்ந்த அடையாளத்தை அளிக்கிறது. அவர்களுக்கு அதைத் தாண்டிய இன அடையாளச் சரடின் ஒரு நுணியாக அது இருக்கிறது. அமெரிக்காவில் இருந்த இருப்பத்தைந்து நாட்களும் நான் கண்ட பல வாசகர்களிடமும் அதையே மீண்டும் மீண்டும் உணர்ந்தேன்.

அமெரிக்காவின் இருபத்தைந்து நாட்கள் பயணத்தில் அமெரிக்காவைப் பற்றிய பல வரலாற்றுச் சித்திரங்களை அறிந்துகொண்டேன். இப்போதைய அமெரிக்காவின் செயல்களால் முதலில் ஒருவித கசப்புணர்வுடனே அணுகினேன். ஆனால் அமெரிக்காவின் சுதந்திர உணர்வு, அதன் அறிவுலக பங்களிப்பு சார்ந்த தகவல்கள் ஒருவித குழப்பத்தையும் அதன் பிறகான நிதானத்தையும் எனக்களிக்கிறது. இந்த நாட்டின் உண்மையான வரலாற்றை முழுவதும் அறிந்து கொண்டு, அதே சமயம் அதன் தவறுகளிலிருந்து கற்று எப்படி இந்த உலகம் முன்செல்ல வாய்ப்பிருக்கிறது என்று பார்ப்பதுமே சரியான கோணமாக அமையும் என்று தோன்றுகிறது. சுதந்திர தேவி சிலையை கண்ட போது ஏற்பட்ட எண்ணமும் அதுவே. இப்போது இந்த சிலைக்கு என்ன பயன் என்ற சலிப்பும் அதன் பிறகான அதன் குறியீட்டுத் தன்மையின் சிறப்பும் உலக நிதர்சனத்தை காட்டி என்னை பேச்சற்று உறைய வைக்கிறது. எல்லா நாடுகளில் இருந்தும் மக்களை அறிவுலகு நோக்கி அழைக்கும் தேவி, வழிகாட்டும் தேவி என்பது மிக உணர்வுபூர்வமான குறியீடுதான். அமெரிக்கா பலருக்கும் வாழ்க்கை அளித்திருக்கிறது. ஆனால், அந்த சிலை உருவான காலத்தில் இருந்தே எதிர்ப்புகளும் இருந்திருக்கிறது. ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பத்திரிக்கை, உண்மையான சுதந்திரம் கிடைத்த பிறகு சுதந்திர தேவியின் ஒளிவிளக்கை ஏற்றலாம் என்று கூறி எதிர்ப்பை பதிவு செய்தது. தொடர்ந்து இன்று வரை அதற்கு எதிர்ப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதுவே அமெரிக்காவின் ஆதார குணம். அதன் அமைப்பின் துணை கொண்டே அதை எதிர்க்கும் வாய்ப்பை தனிமனிதர்களுக்கு அது அளிக்கிறது.

Trail of Tears

வாஷிங்டன் நகரில் இரண்டு அருங்காட்சியகங்களுக்குச் சென்றோம். ஒன்று, ஆப்பிரிக்க அமெரிக்க அருங்காட்சியகம், மற்றொன்று நேடிவ் அமெரிக்கன் அருங்காட்சியகம் (சிகப்பிந்தியர்கள் என்று சொல்வது முறையல்ல). இரண்டுமே என்னை மிகவும் பாதித்தது. ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பஞ்சங்கள் ஆகியவற்றால், அமெரிக்காவிற்கு அதிகமாக மக்கள் குடியேரத் துவங்கினார்கள். அதிலும் ஆண்களே மிக அதிகமாக குடும்பங்களை விட்டு பிரிந்து தனியாக குடியேறினார்கள். ஒரு கட்டத்தில் ஐரோப்பாவின் (முக்கியமாக பிரிட்டனின்) பல கைதிகள் அமெரிக்காவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டார்கள். ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு பகுதியாக குடியிருக்கத் தொடங்கினார்கள். இதன் காரணமாக, அமெரிக்கா முழுவதும் பரவியிருந்த பூர்வ குடியினர் தங்கள் நிலங்களை விட்டு விரட்டப் பட்டார்கள். அவர்கள் ’துரத்தியடிக்கப்’படவில்லை. புதிய உலகின் ’மேம்பட்ட’ கொள்கைகளின் மூலம் பல ‘Treaties’ களில் கையொப்பம் வாங்கியே நிலங்களை அவர்களிடமிருந்து வாங்கினார்கள். ஆனால், பெரும்பாலான கையெழுத்து யாரோ ஒருவரிடமிருந்து பெறப்படும். ஊர்தலைவர்களிடமிருந்து அல்ல. நேடிவ் அமெரிக்கன் விஷயத்தில், அரசின் நீதி உணர்வுகள் காகித அளவில் காணக் கிடைக்கிறது. நேடிவ் அமெரிக்கர்களின் நிலத்தை அவர்கள் ஆளலாம். தனி நாடாக செயல்படலாம் (Soverignity) என்றெல்லாம் ஆரம்பகட்ட அரசாங்க குறிப்புகள் சொல்கிறது. ஆனால், வெள்ளையர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அமெரிக்க நிலத்தின் இயற்கை வளங்கள் அவர்களை கவர்ந்தது. வளங்கள் பறிக்கப்பட்டு ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் அவர்கள் வேறு நிலத்திற்கு குடியமர்த்தப்பட்டார்கள். அமெரிக்காவின் தெற்கு பகுதியில் ஐந்து நேடிவ் அமெரிக்க குடிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சற்று மேற்குலக கலாச்சாரத்திற்குள் வந்தவர்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள். செரோக்கீ என்ற பெரிய குடி அதில் சற்று பிரபலம். காட்டன் உற்பத்தியில் இந்த குடிகள் சிறந்து விளங்கினர். அந்த வளத்திற்காக அவர்கள் மீண்டும் அங்கிருந்து மாற்றப்பட்டார்கள். மிசிஸிப்பி நதியைக் கடந்து மேற்கு நோக்கி இன்றைய ஒக்லஹோமா மாகாணத்திற்கு சென்றார்கள். “Trail of Tears” என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் கட்டாய இடப்பெயர்வு “Indian Removal Act 1830” ஆல் நடந்தது. பல கட்டங்களாக மொத்தமாக அறுபதாயிரம் பேர் வரை இடம்பெயர்ந்து, மாதக் கணக்கில் நடந்து செல்ல வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பதினாராயிரம் இந்தியர்கள் செல்லும் வழியில் இறந்து போனார்கள். இந்த குடிப்பெயர்வின் அம்சங்களில் இருந்து ஹிட்லர் உந்துதல் அடைந்து ‘வோல்கா நமது மிசிஸிப்பி ஆக வேண்டும்’ என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இப்போதைய அமெரிக்காவில் கிட்டத்தட்ட 574 அங்கீகரிக்கப்பட்ட நேடிவ் நாடுகள் உண்டு. அவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள், உரிமைகள் உள்ளன. ஆனால் அதே அளவு அங்கீகாரம் மறுக்கப்பட்ட, அங்கீகாரம் கோரும் பூர்வ குடி அமைப்புகள் இன்றும் உள்ளனர். இப்படியே நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு அவர்களது மக்கள்தொகை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு குறைந்துவிட்டது. அன்னியர்களின் வருகையால் நோய்கள் தாக்கி பல லட்சம் பேர் இறந்து போயினர். அவர்களது குழந்தைகள் உறைவிடப் பள்ளிகளில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டு அவர்களது கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டன.

எங்கள் அமெரிக்க பயணத்தில் நாங்கள் ஒரு இடத்தில் கூட நேடிவ் அமெரிக்கர்களை சந்திக்கவில்லை. அவர்கள் வாழும் சில இடங்களைப் பற்றி நண்பர்கள் சொல்ல கேட்டோம். ஆனால் எங்களுக்கு அங்கு செல்லும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால், மேற்கு கடற்கரைப் பகுதியில் எங்களது பயணம் முழுக்க அவர்களது மூதாதயர்களின் மானசிக இருப்பை உணர்ந்து கொண்டே இருந்தோம். நாங்கள் சென்ற செக்கோயா மரக் காடுகள், யோசிமிட்டி தேசியப் பூங்கா ஆகியவற்றின் பெயர்கள் அவர்கள் இந்த பிரம்மாண்ட வளங்கள் மிகுந்த தேசத்தின் பிள்ளைகள் என்பதை நினைவு படுத்தியவண்ணம் இருந்தது. பரந்துபட்ட நிலக் காட்சிகள், கடற்கரைகள், காடுகள் ஆகியவை அவர்களது ஆன்மாவின் பகுதியாக இருந்திருக்கும். அவர்கள் இயற்கையை வழிபடும் ஆதி குடிகளாக இருந்திருக்கிறார்கள். மவுண்ட் சாஸ்தா மலை அவர்களது தெய்வம். ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் ஒவ்வொரு விதமாக தோற்றமளித்தது. மிகப் பிரம்மாண்டமான எரிமலை. அதனுள் உறையும் நெருப்பு என்றும் அணையாமல் அதன் பிள்ளைகளின் ஆன்மாவை பாதுகாக்கும் என்று தோன்றியது.

பின்னணியில் சாஸ்தா மலை

ஆப்பிரிக்கர்களின் கதை வேறுவிதம். அவர்கள் மிக மிக மோசமான நிலையில் இருக்கும் கப்பலில், ஆயிரக்கணக்கில் மிக நெருக்கமாக அடைக்கப்பட்டு, கொடுமைகள் தாங்காமல் இறந்தவர்களை கூட அப்புறப்படுத்தாமல் அமெரிக்கா கொண்டுவரப்பட்டார்கள். கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் அடிமைமுறை நீடித்தது. 1865 இல் அடிமைமுறை ஒழிக்கப்பட்டாலும் 1910 களில் ஜிம் கிரோ சட்டங்கள் மூலம் ஆப்பரிக்க அமெரிக்கர்கள் மீண்டும் ஒடுக்கப்பட்டனர். 1950 களில் நடந்த சிவில் ரைட்ஸ் இயக்கம் முதல் 2020 இல் நடந்த பிளாக் லைஃப் மேட்டர்ஸ் இயக்கம் வரை நாம் அவர்களது போராட்டங்களை கண்டு வருகிறோம். தெற்கு கரோலினாவில் இன்றும் அவர்களது நிலையைக் குறித்து எழுத்தாளர் ஜெரால்டின் அவர்கள் நியூயார்க் இலக்கிய விழாவில் பேசியதை அதற்கு சாட்சியாகக் கொள்ளலாம்.

சிவில் ரைட்ஸ் இயக்கம் – Elizabeth Eckford

அமெரிக்கா பூதாகரமான பொருளாதார வளர்ச்சி அடைந்தது ஒருபுறம். அதன் காரணமாகவே அது பல அப்பாவி குடிகளை விழுங்கியது. ஆனால் மறுபுறம் புதிய நிலம் உருவாக்கும் புதிய சிந்தனைகளே ஒரு மேம்பட்ட சமூகத்தின் தொடக்கத்திற்கு வழிவகுக்கிறது. அப்படி, அமெரிக்காவின் அறிவுச்சமூகம் தத்துவம், சமூக சீர்த்திருத்தம், தனிமனித விடுதலை, நிலம் சார்ந்த உரிமைகள் ஆகிய பல கோணங்களில் தற்போதைய உலகத்தை உருவாக்கியுள்ளது. அதில் எமர்ஸன், தோரோ போன்றவர்களின் பங்களிப்பு குறித்து ஜெ எழுதிய குறிப்பு வாக்களிக்கும் பூமி 6, வால்டன் | எழுத்தாளர் ஜெயமோகன். சில மாற்று மத நம்பிக்கை கொண்டவர்களையும் அமெரிக்கா வரவேற்றது. Puritans மற்றும் Quackers அப்படி உருவாகி வந்தவர்கள் தான். 

அமெரிக்கா மற்ற நாடுகளின் விடுதலைக்கு வழிவகுத்ததா? புதிய உலகின் குரலாக அதன் மதிப்பென்ன? என்ற கேள்வியுடன் சில கட்டுரைகளை படித்துக் கொண்டிருந்தேன். முக்கியமாக, இந்திய விடுதலையில் அதன் பங்கு என்ன? இந்திய விடுதலைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது; பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பிரித்தானிய அரசை இந்திய விடுதலைக்காக வலியுறுத்தினார் என்ற கருத்து உண்டு. முதலாம் உலகப் போரின் போது ஊட்ரோ வில்சன் உலக காலனியாதிக்கத்தின் முடிவை வலியுறுத்தினார் என்பதும் இந்திய விடுதலை இயக்கத்தின் போக்குக்கு சாதகமாக அமைந்தது (அவர் இந்திய விடுதலையை மனதில் வைத்து அதை பேசவில்லை. ஐரோப்பிய நாடுகளுக்கு தான் அவர் அதை வலியுறுத்தினார் என்பது வேறு விஷயம்). ஆனால், உண்மையாக இந்திய விடுதலைக்கு அமெரிக்க அரசாங்கம் உறுதுணையாக இருந்ததா என்றால், இல்லை என்றே பெரும்பாலும் சொல்லலாம். 1900களின் தொடக்கத்தில் இருந்தே இந்திய விடுதலைக்கான குரல்கள், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களிடமிருந்து வரத் தொடங்கியது. 1920கள் வரைக்கும் (முதல் உலகப் போர் முடிந்த சமயம்) அமெரிக்க அரசாங்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நல்லுறவில் இருக்கவே விரும்பியது. எனவே, இந்தியர்கள் சிலர் ஜெர்மானியர்களின் உதவியுடன் எதிர்ப்புகளை வலியுறுத்திய போது, அவர்களை அமெரிக்க அரசு கைது செய்தது. பல போராளிகளை ஒடுக்கியது. அதே சமயம், அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் தங்கள் விடுதலைக்காக குரல்கள் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். கருப்பினத்தவரும் இந்திய விடுதலை போராட்ட அமைப்புகள் பலவும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். 1920களுக்கு பிறகு, இந்திய விடுதலைக்கான குரல்கள் கொடுத்த முக்கியமான அமைப்புகள் Friends of Freedom of India (FFI), Ghadar party மற்றும் Young India பத்திரிக்கை ஆகியவற்றை கூறலாம். Jabez T Sutherland என்ற யூனிடேரிய கிருத்தவர் எழுதிய ‘Indian in Bondage, Her right to freedom’ இந்தியாவில் தடை செய்யப்பட்டும் பரவலாக படிக்கப்பட்டது. தாகூர், லாலா லஜ்பத் ராய் ஆகியோருடன் நட்பில் இருந்தவர் அவர். எமர்சனின் வழி வந்தவர் என்றும் கூறலாம். எமர்சனை பற்றியும் எழுதியிருக்கிறார். இதிலிருந்து அமெரிக்க மண் எப்படி புதிய உலகத்தின் பிறப்பிற்கு உறுதுணையாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதன் அறிவுத்தளம் என்றுமே சுதந்திர சிந்தனையின் வழியையே தேர்ந்தெடுக்கிறது.

Jabez T Sutherland

அமெரிக்காவின் இப்போதைய நிலையை எப்படி பார்ப்பது? அமெரிக்கா மீது நம்பிக்கை கொள்ளலாமா? 9/11 சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்க அரசாங்கத்தின் சட்டங்களில் அதன் கொள்கைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மக்களும் அந்த நிகழ்வின் உக்கிரமான தாக்கத்தால் மிகவும் உளச்சோர்வும் பாதுகாப்பின்மை உணர்வையும் அடைந்தனர். இஸ்லாமாபோபியா அதிகரித்தது. இன்று வரை இந்த மன நிலை மாற்றம் அமெரிக்கவின் முடிவுகளில் பிரதிபலிக்கிறது. போர், எண்ணெய், பொருளாதார கொள்கைகள் ஆகியவற்றில் அமெரிக்கா எப்படிப்பட்ட ஆதிக்கத்தை அதிகாரத்தை செலுத்துகிறது என்பதை தினம்தோறும் பார்த்து வருகிறோம். அமெரிக்கா பல கலாச்சார மற்றும் அறிவுத்துறை சார்ந்த நிதியுதவிகளை நிறுத்திவருகிறது. சமீபத்தில் என் தோழியின் கல்லூரியில் இருந்த இந்த நிதியின்மை சார்ந்த அவலங்கள் படிப்பை எப்படி பாதித்தது என்று கூறினாள். புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் படிப்புக்காக செல்பவர்களின் நிலையில் நெருக்கடிகள் அதிகமாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. அமெரிக்க டாலர் மதிப்பு சார்ந்த கேள்விகள், ரஷ்ய சீன வளர்ச்சி ஆகியவை பலவிதமான பொருளாதார மாற்றத்திற்கான வாய்ப்புகளை காட்டுகிறது. அது சமூக மாற்றமும் தான். அமெரிக்கா என்ற ஒற்றை நாட்டின் மேல் நம்பிக்கையோ, சார்பு நிலையோ கொண்டிருக்க வேண்டாம் என்று எல்லா நாடுகளும் தங்கள் அதிகாரத்தை, பலத்தை காட்டும் காலமாக இது இருக்கிறது. அரசியலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால், அறிவுலகத்தின் பயனாக உருவான ஒரு சமூகம் அங்கு இருக்கிறது. இப்போதைய அமெரிக்கா உலகத்தின் எல்லா நாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த மூளைகளை தன்னிடம் வைத்திருக்கிறது. இளைஞர்கள் புதிய உலகச் சமூகமாக அங்கே உருவாகிவருகிறார்கள். அங்கிருக்கும் பிள்ளைகள் எப்படி ஒரு உலகச் சமூகமாக வாழ்கிறார்கள் என்பதை பார்க்கமுடிந்தது. நாங்கள் சுற்றுலா சென்ற பல இடங்களில் சீன, லத்தின் அமெரிக்க, ஆப்பிரிக்க அமெரிக்க மற்றும் வெள்ளை அமெரிக்கக் குழந்தைகள் ஒரே பள்ளியில் இருந்து வந்திருந்தார்கள். இது ஒரு சாதனையா என்று தோன்றலாம். ஆம், அது மிகப் பெரிய சாதனைதான். ஒவ்வொரு குழந்தையின் மூதாதையர்களும் எத்தகைய இனப் பெருமைகளில் இருந்து வந்திருப்பார்கள்? எத்தனை விதமான கலாச்சார பின்புலங்கள்? உடல் மற்றும் மனதின் மொழிகள்? அதை அறிந்து அதை வென்று நாளைய பொது உலகத்தை அவர்கள் இயல்பாக கட்டமைக்கிறார்கள். அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களின் வேர்கள் மிக ஆழமானவை. அமெரிக்காவின் சுதந்திர (Liberty) சிந்தனை என்ற கருதுகோளை இளைஞர்கள் மீளுருவாக்கம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். Positive liberty vs Negative liberty என்ற திசையில் விவாதித்து வருகிறார்கள். தனிமனித பேச்சு மற்றும் நடத்தை சார்ந்த சுதந்திரத்தின் எல்லைகளில் இருந்து சமூகத்தின் நலன்கள் சார்ந்த சிந்தனைகள் நோக்கி நகர்கிறது இந்த விவாதம். டெஸ்லா காரின் உலகத்தில் மனிதர்கள் எப்படி தங்கள் மனதை ஒருமைப்படுத்தி வைத்துக்கொள்வது, ஒரு சமூகமாக எப்படி நாம் நமது நெறிமுறைகளை (ethics) வகுத்துக்கொள்வது என்ற கேள்விகள் இன்று முக்கியமாகிறது. ஐரோப்பாவின் குடிகளுக்கு அளிக்கப்படும் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், மக்களின் பாதுகாப்பு ஆகிய Welfare state சார்ந்த உரையாடல்கள் நோக்கி இன்று கவனம் திரும்பியிருக்கிறது. அமெரிக்காவில் அந்த மாற்றம் நிகழ்ந்தால் தான் உலகமெங்கிலும் நிகழும்.

உலகப் பயணங்கள் ஒரு நாட்டின் வரலாற்றையும் மனிதர்களின் வருங்காலத்தையும் காட்டுகிறது. மனிதகுலமாக நம்மை நாம் மதிப்பிட நாடுகளைக் கடந்த பயணங்கள் வழிவகுக்கிறது. நம் புகைப்படத்தை கண்டு நாம் அடையும் ஞானத் துணுக்குறல் போன்றதது. நாடுகளைக் கடந்த மனிதம் மேம்பட்டுக்கொண்டே தான் இருக்கும் என்பதில் இப்போது நம்பிக்கை கொள்கிறேன். ஒவ்வொரு கசப்பான பாதையைக் கடந்தும் நாடுகளைக் கடந்த மனிதத்தை நோக்கியே புதிய உலகம் செல்கிறது. ஜெவின் ‘உலகம் யாவையும்’ காரி டேவிசின் ’கிருக்குத்தனமே’ நம் மனிதத்தன்மையை உறுதிப்படுத்துவது. அதைப் பற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

மீண்டும் சென்னை வந்திறங்கியது ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவு. ஏர்போர்டில் இருந்து அணல்காற்று அடிக்க வெளியேறியபோது இந்த மாநகரம் வரவேற்று தன் ஈரப்பதத்தால் தழுவிக்கொண்டது. தேர்தல் முடிந்து மக்கள் ஒன்றும் தெரியாதவர்கள் போல இயல்பாக நடமாடிக் கொண்டிருந்தனர். மனிதக் குரல்களின் பரபரப்பு. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நின்றிருந்த அதே உணர்வை ஒரு கணம் அடைந்து மீண்டேன்.

Leave a Reply

Discover more from saaradhai.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading