நான் காவிய முகாமிற்கு செல்வது இது மூன்றாவது முறை. மூன்று நாட்களில் வெவ்வேறு விதமான புனைவுகள், இலக்கியக் கோட்பாடுகள், கவிதைகள் சார்ந்த விவாதங்கள் என்று மிகவும் தீவிரமான வாசிப்பை, பல தரப்பு வாதங்களை அறிந்து கொள்ளச் செய்யும் சிறந்த அமைப்பை கொண்டது காவிய முகாம். 1993 முதல் ஊட்டியில் குரு நித்ய சைதன்ய யதியின் குருகுலத்தில் தொடங்கிய இந்த முகாம், கடந்த சில வருடங்களாக வெள்ளிமலையில் நடந்து வருகிறது. இந்த வருட முகாமில் நடந்த அமர்வுகள், அதில் நடந்த முக்கியமான சில விவாதப் புள்ளிகள், முகாமிற்கு பிந்தைய வாசிப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட நூல்கள் ஆகியவற்றை தொகுக்கும் பதிவு இது.
காவிய முகாமில் எப்போதுமே கவிதைகளுக்கான அமர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த முறையும் மரபு கவிதைகள் சார்ந்து ஐந்து அமர்வுகள் நடந்தன. ஜா. ராஜகோபாலன் கம்ப ராமாயணத்தையும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் இணைக்கும் சில முக்கியமான படிமங்கள், சொற்கோவைகள் ஆகியவற்றை பேசினார். ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் தொடங்கி திருமங்கையாழ்வார் வரையிலான காலகட்டம் ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை நீள்வது. பத்தாம் நூற்றாண்டில் தான் கம்ப ராமாயணம் இயற்றப்பட்டது. கம்பன் நாலாயிர திவ்யப்பிரந்தத்தில் இருந்து எப்படி சில படிமங்களை எடுத்துக்கொண்டு அடுத்தக்கட்ட கவித்துவ உச்சத்திற்கு அதை எடுத்துச் செல்கிறார் என்பதை சுட்டிக்காட்டினார். உதாரணமாக, பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார் ’மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர்’ என்று நிலவை ஒரு மாடு போல் வர்ணித்து, நாங்கூர் மணிமகுடங்கள் அதன் அகிடை உரிஞ்சி அதை தேய வைக்கிறது என்கிறார். அதே போல கம்பன், ‘காண் வரு நெடு வரைக் கதலிக் கானம்போல்….சேண் மதி தேய்வது, அக்கொடிகள் தேய்க்கவே’ என்று, நெடிய கொடி மரங்கள் நிலவை தேய்ப்பதனாலேயெ, நிலவு தேய்கிறது என்கிறார்.
இதற்கடுத்த மரபுக்கவிதை சார்ந்த, ‘ கலிங்கத்துபரணி’ அமர்வு. இந்த அமர்வு, பலருக்கும் ஒரு புதிய திறப்பை அளித்தது. லக்ஷ்மி நாராயணன் இந்த அமர்வை நடத்தினார். பரணி என்பது ஆயிரம் யானைகளை கொன்ற ஒரு அரசரைப் பற்றி பாடப்படுவது என்ற பொதுவான எண்ணத்தை நிராகரித்தார். பரணி நட்சத்திரம் என்பது காளிதேவிக்குரிய நட்சத்திரம். காளி தேவிக்கான பாடல்களை பரணி நட்சத்திரத்தில் பாடுவார்கள். அத்தகைய பாடல்களை கொண்டதே கலிங்கத்துப்பரணி என்றார். இன்றும் பரணி நட்சத்திர தினத்தில் கேரளத்தில் பல திருவிழாக்கள் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார். கலிங்கத்துப்பரணி ஒரு செவ்வியல் படைப்பா என்று நோக்கினால், அப்படி அதன் அம்சங்கள் பொருந்தி வரவில்லை; அப்படியென்றால் இன்றும் அது படிக்கப்படுவதற்கு காரணம், அதன் ஒலி நயம் மற்றும் சந்த நயம் என்று கூறலாம். அவர் சில செய்யுள்களை படித்து காட்டும் போது, அதன் ஓசை நயத்திலேயெ அது போர்களத்தின் துடிப்பை காட்டும் வகையில் அமைந்திருந்தது. ’எடுமெடு மெடுமென் வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே’ என்பது போன்ற வரிகள் அதற்கு உதாரணம். அதன் பிறகு படித்த சில பாடல்களில் அவர் கூறிய போர் காட்சிகள் (போர் பாடியது), போருக்கு பிறகான காட்சிகள் (களம் பாடியது) மிகையான அதீத கற்பனை கொண்டதாக இருந்தது. அது ஒருவித அருவருப்பான உணர்வையும் நமக்களித்தது. ஒரு பாடலில், உடல் இரண்டாக துண்டுபட்ட வீரர்கள், தங்கள் ஒரு காலை எதிரி மேல் வீசிவிட்டு மறு காலை அடுத்த தாக்குதலுக்கு எடுத்து வைத்துக்கொள்வார்கள் என்ற ஒரு காட்சி வருகிறது. இயல்பாக எல்லோரும் அதன் அபத்தத்தை அறிந்து சிரித்தோம். இறுதியில், ஏன் இத்தனை கொடூரமான ஒரு சித்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு லக்ஷ்மி நாராயணன், இப்பாடல்களில் அங்கதம் மூலம் போரின் அபத்தம் வெளிப்படுகிறது என்றார். அகரமுதல்வன் அதற்கு, ஒரு போர்ச்சூழலில் இருந்து வந்தமையால தனக்கு இது ஒருவித காமவெளிப்பாடாக (lust or obsession), போரை ரொமாண்டிசைஸ் செய்யும் விதமாகவே தோன்றுகிறது. கன்னட எழுத்தாளர் விக்ரம், இது பீபத்ஸ ரசத்தை கொண்டதாக இருக்கிறது, இதன் இறுதியில் சாந்தி நிகழ்கிறதா? என்று கேட்டார். ஒரு செவ்வியல் இலக்கியத்தில் அத்தகைய பரிணாமம் இருக்கும் என்பதால் அவர் அக்கேள்வியை முன்வைத்தார். ஆனால் கலிங்கத்துப்பரணியில் அது இல்லை.

கற்பதிந்த இலக்கியங்கள் என்ற அமர்வில் சிவ கிஷோர் முன்வைத்தது கல்வெட்டுகளில் இருக்கும் பாடல்களின் இலக்கிய அம்சங்கள் குறித்து. கல்வெட்டுகளில் மூன்று விதமான பாடல்களை குறிப்பிட்டார் – செய்திச் செய்யுள்கள், மெய்கீர்த்தி பாடல்கள் மற்றும் கவிதைப் பாடல்கள் என்று. இந்த ஒவ்வொரு வகைமையின் அமைப்புகள், அதன் அம்சங்கள் குறித்து பேசினார். சிராமலை அந்தாதி கல்லில் பொரிக்கப்ப்ட்ட முழு இலக்கியப் படைப்பு என்று குறிப்பிட்டு அதன் சில பகுதிகளை படித்துக் காட்டினார். கல்லில் பதிந்த இலக்கியங்களின் காலம் கடந்த தன்மையே ஒரு வித படிமமாகத் தோன்றியது.
ஈஷ்வரி, ’குறுந்தொகையில் மலர்கள்’ என்ற அமர்வை நடத்தினார். இந்த அமர்வு மலர்களை முன்வைத்து அவை எப்படி பாடல்களில் உவமையாக வந்துள்ளது என்பது விவாதிக்கப்பட்டது. மயிலின் கால் ஒத்த இலைகளை உடைய நொச்சிப் பூ, கொக்கின் பின்புறம் போன்றிருந்த ஆம்பல் பூ, தலைவியின் அழகை வர்ணிக்க பயன்படும் குவளை, காந்தள், முல்லை மலர்கள் என்று பல சுவாரஸ்யமான பாடல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு பூக்கள் இருக்கிறது, அதன் பொருளும் தகுந்தாற்போல மாறும் என்பதை தமிழாசிரியர் மணிமேகலை சுட்டிக்காட்டினார்.
’இலக்கியத்தில் பறவைகள்’ என்னும் அமர்வு விஜயபாரதியால் நடத்தப்பட்டது. மிகவும் சுவாரஸ்யமான, பறவைகள் சார்ந்த தன் சிறப்பான புரிதலில் அவர் அளித்த அர்த்தங்கள் மரபிலக்கிய பாடல்களைப் புரிந்து கொள்வதில் ஒரு புதிய கோணத்தை அளித்தது. யானையும் – குறும்பூழும் (காடை), தேன் சிட்டும் மீன்கொத்தியும் என்ற இருமைகள் மிக அழகான படிமங்களாக மனதில் பதிந்தது. யானையைக் கூட வேட்டையாட முடியும் ஆனால் குறும்பூழ் அப்படியல்ல என்பதை அதன் விரைவுத்தன்மை மற்றும் அதன் இனப்பெருக்க காலத்தின் போது அதன் உடல் வாசனையற்றதாக ஆவது ஆகிய அறிதல்கள் மூலம் மிக நுண்ணிய படிமங்களை சிந்திக்க முடிந்தது. அவர் பேசியதில் முக்கியமான விவாதப்புள்ளி, அறிவு இலக்கியத்திற்கு தடையாக இருக்கிறதா? என்ற கேள்வியை முன்வைத்தே. இவ்வகையான பறவை பற்றிய அறிதல்கள் நிச்சயமாக இலக்கியச் சுவையை அதிகரிக்கிறது. ஆனால், இன்னொரு வகையில் பார்த்தால், அறிதல் எப்படி தடையாக இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக அன்றில் பறவை தன் இணையை பிரிந்த துயரில் உயிர்விடும் என்பது ஒரு மிகைப்படுத்தல் என்று கூறுவது ஒரு அறிவியல் சார்ந்த புரிதல். ஆனால், அன்றில் பறவையின் குரலின் வேதனையை வைத்து ஒரு கவிஞன் அதை எழுதியிருக்கக்கூடும் என்பதை நாம் இலக்கிய வாசகராக புரிந்து கொள்ளலாம். ஜெ அதை Poetic liscence என்ற புரிந்து கொள்ளலாம். ஆனால் அதை அறிந்து நாம் அந்த இலக்கியத்தை வாசிக்க வேண்டும் என்றார். குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களைப் பற்றிய வர்ணனைகள் பெரும்பாலும் உண்மையாகத்தான் இருக்கும். ஆனால், பாலையோ, நெய்தலோ எல்லா கவிஞனும் அனுபவித்து எழுதியிருக்க மாட்டார்கள். எனவே பல பொதுப்படையான அல்லது சில தவறான விவரணைகளையே காண இயலும் என்றார்.
***
நவீன கவிதை சார்ந்து இரண்டு அமர்வுகள் நடைப்பெற்றன. அதில் நாமக்கல் சங்கரின் ‘கவிதையை அடைதல்’ அமர்வு, கவிதையில் கவிஞனுக்கும் வாசகனுக்கும் நிகழும் ஒரு பரிணாமத்தை பற்றிய அமர்வாக இருந்தது. அவர் படிப்பதற்கு அளித்திருந்த கல்பற்றா நாராயணன் அவர்களின் ‘கழுதையும் குதிரையும்’ என்ற கட்டுரையே ஒரு கவிஞனின் பரிணாமத்தை மிகச் சிறப்பாக காட்டும் வகையில் அமைந்திருந்தது. அந்த பரிணாமம் ஒரு வித மர்மமான (magical), விளக்கமுடியாத பல அம்சங்களால் நிகழ்வது என்னும் வகையிலேயே அவர் பேசினார். இட்லியில் இருக்கும் காற்று வெளிகளையே நாம் இட்லியின் சுவையாக உண்கிறோம் என்ற Masala Lab கிஷோர் அவர்களின் வீடியோவிலிருந்து ஒரு படிமத்தை எடுத்து சுவாரஸ்யமாக தன் உரையை தொடங்கினார். கவிதையின் அர்த்தத்தை தாண்டிய ஒரு திறப்பு, ஒரு அற்புதத் தனம் கவிஞனுக்கும், வாசகனுக்கும் கவிதையில் நிகழ்கிறது என்று கூறினார். கவிஞர்கள் எப்படி தன் கவிதையின் மந்திர வரிகளை அடைகிறார்கள், அது பல சமயங்களில் செப்பனிடும் ஒரு வழிமுறை மூலமாக நடக்கிறது என்று கூறி, பசுவய்யா மற்றும் கல்பற்றாவின் கவிதை versions-ஐ அவர் சுட்டிக்காட்டினார். அந்த மாற்றம் எப்படி நடக்கிறது என்பதை விளக்கிவிட முடியாது என்றும் குறிப்பிட்டார். ‘இந்த தன்னிலைப்பூர்வமான மாற்றங்கள் செய்வது தேவையா? ஒரு வாசகன் ஒரு கவிதையை எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமாக (புறவையமாக) அணுகி படிக்க முடியும்? அதன் எல்லைகள் என்ன?’ என்ற கேள்விகளை ஜெ எழுப்பினார். அதற்கு, கவிஞர் மோகனரங்கன் மற்றும் கன்னட எழுத்தாளர் விக்ரம் அவர்கள் கூறியது, ஒரு பொறி அல்லது ஒரு சில முக்கிய வரிகளே கவிஞனுக்கு தோன்றுவது. அதன் பிறகு அவனது புறவயமான விழிப்பு மனமே அதை ஒரு முழுக்கவிதையாக்குகிறது என்று கூறினர். அதை ஒட்டிய சில கருத்து பரிமாற்றங்கள் நடைப்பெற்றன.

மற்றொரு நவீன கவிதை அமர்வு, ’கவிதையில் அறிவார்த்தம்’ என்ற பெயரில் கவிஞர் போகன் சங்கர் நடத்தினார். நவீன கவிதை ஏன் mystify செய்யப்படுகிறது என்பது ஒரு பொதுவான கேள்வியாக இருக்கிறது. அதை எவ்வளவு தூரம் அறிவு சார்ந்து இயங்குகிறது, மேற்குலக அறிவியக்க வரலாற்றில் அதன் பரிணாமம் ஆகியவற்றை ஆராயும் விதமாக அவரது உரை அமைந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் அறிவொளிக்காலம் ஐரோப்பாவில் வளர தொடங்கியது. அதன் முன்பாக கடவுள் சார்ந்த (theological topics), உள்ளுணர்வு சார்ந்த கவிதைகள் அதிகம் எழுதப்பட்டது. அறிவொளிக்காலம் கடவுள் என்ற Idol ஐ இழந்து அறிவு சார்ந்த வேறு தேடல்களை நோக்கி சென்றது. தத்துவங்கள், அரசியல் கோட்பாடுகள் சார்ந்த கருப்பொருள்கள் பெருகின. Imagism என்று சொல்லப்படக் கூடிய வடிவம் அதன் பிறகு உருவானது. அதன் பிறகு, இதன் எதிர் நிலையான Romantic era கவிதை உலகில் உருவானது. அது இயற்கை சார்ந்து இயங்கியது என்று ஒரு வரலாற்றுப் பார்வையை அளித்தார். Idol கள் இல்லாமல் ஆகும் போது ஒரு கவிஞனுக்கு ஏற்படும் வெறுமையை Hymn to Intellectual Beauty என்ற Shelly இன் கவிதையைக் கொண்டு வாசித்தோம். அவர் கடவுளைத் தேடுகிறார் (age of reason). இந்த நகர்வு தமிழில் எப்படி பாதித்தது என்பதற்கு அவர் அளித்த பதிலை இப்படி தொகுக்கலாம், Metaphysical quests —> Political quests —> Philosophical quests. தேவதச்சனின் கவிதைகளை அவர் அறிவார்த்த கேள்விகள் நோக்கி செல்வதாக குறிப்பிட்டார்.
அறிவு சார்ந்த கவிதை என்ற வரையறை செய்வது சற்று கடினமான ஒன்று என்றே எனக்கு தோன்றியது. எல்லா அறிவையும் (knowledge) ’intellectual’ poetry என்று வகைப்படுத்திவிட முடியாது என்றும் தோன்றுகிறது. இந்த இரண்டு நவீன கவிதை அமர்வுகளும் கவிதையின் objectivity மற்றும் intellectual quality தொடர்பான கேள்விகளை மனதிற்குள் எழுப்புகிறது.
***
இதற்கடுத்ததாக, புனைவு எழுத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட அம்சங்கள் சார்ந்த கதைகளை மையமாகக் கொண்டு விவாதிக்கப்பட்ட அரங்குகளை தொகுக்கலாம் என்று நினைக்கிறேன். ’இலக்கியத்தில் தத்துவம்’ அதில் முதலாவதாக பார்க்கலாம். அமுதா அவர்கள் அந்த அமர்வை நடத்தினார். வாசிப்பு பகுதியாக அவர் திருக்குறள், அசோகமித்ரனின் ‘காட்சி’ சிறுகதை மற்றும் அக்னிநதியின் சில பகுதிகளை அளித்திருந்தார். Homo sapiens எப்படி இத்தனை நீடித்து வாழ முடிகிறது என்பதை சிந்தித்தால், நிச்சயமாக நம் அறிவு அதில் பெரும் பங்கு வகிக்கிறது. பிரபஞ்சம் பற்றிய தேடல், மூலத்தை நோக்கிய விழைவு ஆகியவற்றை சொல்லலாம். இது அந்த மனிதன் உருவாக்கிய மொழி வழியாக, அவனது இலக்கியத்திலும் வளர்ந்து வெளிப்படுவது ஆச்சரியமில்லை. அப்படி திருக்குறளில் நாம் ஒரு Traditional knowledge (Metaphysical) தேடலை காண இயலும். அசோகமித்ரனின் கதையில் அவர் ஒரு அறக்கேள்விக்கு உள்ளாகிறார். உலகின் துயரங்களுக்கு தான் பொறுப்பா? என்ற கேள்வியே நாவலின் அடித்தளம். அக்னி நதியின் கதையில் வரும் முதல் பகுதியில் வேதம் படித்த கௌதமனுக்கு ஏற்படும் வெறுமை, அவனது தத்துவ கேள்விகள், அவனது முன்னாள் காதலி சம்பகை அடையும் தத்துவார்த்தமான நகர்வு ஆகியவற்றை குறித்து பேசினார். ஜெ, இலக்கியத்திற்கு தத்துவம் தேவையா? ஏன், எவ்வளவு தேவை? என்ற கேள்வியை எழுப்பினார். அமுதா அவர்கள் கூறியது, தத்துவம் ஒரு ஆதி அறிவு என்ற வகையில் நமக்கு எப்போதைக்குமான கேள்விகள் சிலவற்றிற்கு பதிலளிக்கிறது என்றார். லக்ஷ்மி சரவணகுமார் கூறினார், ’மார்க்ஸிஸ்ட் தத்துவவியலில் பல காலம் நம்பிக்கை கொண்டிருந்தேன். இலக்கியத்தில் எப்படி அதை கடந்து வெளிப்பட வேண்டும் என்பதையே எனது பயணத்தில் உணர்கிறேன்.’
அடுத்ததாக ’இலக்கியத்தில் இசை’ என்ற தலைப்பில், சிவபிரசாத் அமர்வை நடத்தினார். இசை மேதைகளின் வாழ்க்கையின் அடிப்படையில் வந்த கதை, இசை ரசிகன் பற்றியது அல்லது வாழ்க்கையில் இசையின் பங்கு என்ற கோணத்தில் ஐந்து கதைகளை முன்வைத்து அமர்வை நடத்தினார். அஜிதன், செந்தில் ஜெகன்னாதனின் ‘காகளம்’ கதையில் இசை பிண்ணனியாக இருப்பினும் அதில் வரும் மளிகைக் கடை சார்ந்த படிமங்கள் கதையை பெரிதும் நகர்த்திச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.
’இலக்கியத்தில் தனிமை’ என்ற அமர்வை ப்ரீத்தி நடத்தினார். Dancing in hell, உருமாற்றம், குட்டி இளவரசன் போன்ற கதைகளை முன்வைத்து தனிமை இலக்கியத்தில் எப்படி கதைக்களமாக கையாளப்படுகிறது என்று பேசினார். சுசித்ரா ‘Dancing in hell’ கதை மற்றும் உருமாற்றம் கதையை முன்வைத்து தனிமை எப்படி ஒருசமயம் மனப்பிறழ்வையும் மறுசமயம் விடுதலையையும் அளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது என்று இக்கதைகளில் காண முடிகிறது என்றார். கன்னட எழுத்தாளர் விக்ரம், இக்கதைகளில் குட்டி இளவரசன் கதை ’தனிமை’ என்று கூறுவதை விட ’ஏகாந்தம்’ என்றே மதிப்பிட முடியும் என்றார்.
***
புனைவெழுத்து சார்ந்த நான்கு விரிவான தலைப்புகளில் நடந்த அமர்வை அடுத்த பிரிவாக பார்க்கலாம். அதில் அகரமுதல்வன் நடத்திய ’ஈழத்து புலம்பெயர் எழுத்தும் பண்பும்’ என்ற அமர்வு தற்கால ஈழ எழுத்தின் வெவ்வேறு விதமான கதைக்களத்தை முன்வைத்து, ஈழ எழுத்தின் பரிணாமம், தற்போதைய கதைகளின் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை பேசினார். முந்தைய தலைமுறை எழுத்தாளர்களை ‘போர் பாடியது’ என்று வகைப்படுத்தினார். அவர்கள் போர் உச்சத்தில் நடைப்பெற்ற காலத்தில் எழுதியவர்கள். எஸ் பொன்னுத்துரை, சோபா சக்தி, முத்துலிங்கம் ஆகியவர்களை அந்த வகைக்குள் பொருத்திவிட இயலும். இப்போதைய ஈழ எழுத்தாளர்கள் ‘களம் பாடியது’ என்ற வகைமைக்குள் நாம் யோசித்து பார்க்கலாம். அவர்கள் பலரும் பல விதமான சமூகச் சூழலில் இப்போது வாழ்ந்து வருபவர்கள். அதில் மூன்று விதமான நாடுகளில் வாழும் மூன்று தற்கால எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் விவாதிக்கப்பட்டது. ’ரம்போ’ கதையில் இராக் போரில் காலை இழந்த தன் நண்பன், மற்றும் அவர் வளர்க்கும் போரில் பங்கெடுத்த நாய் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையில், ஒரு போர்ச்சூழலில் இருந்து சென்று மற்ற போர்ச்சூழலில் இருந்த மனிதர்களை காணும் போது வரும் விலகி நிற்கும் சம நிலையான பார்வையை தெய்வீகன் (ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்) எப்படி அந்த கதையில் எழுதியிருக்கிறார் என்று பேசினார். ஜயகரன் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எழுதிய ’வந்திரங்கிய கதை’ ஒரு அகதி எப்படி அடைக்கலம் தேட ஒரு போர் குற்றவாளியாக தன்னை முன்னிறுத்த வேண்டி இருக்கிறது என்ற அம்சத்தை குறிப்பிட்டார். சென்னையில் வசிக்கும் வாசு முருகவேலின் ‘மூத்த அகதி’ நாவலின் ஒரு வீடு தேடும் படலம் குறித்த சிறு பகுதியை வாசிப்புப் பகுதியாக அளித்திருந்தார். இலைக்குள் இருக்கும் புழுவாக எப்படி அவர்கள் சிறிய வீட்டினுள் புதுந்து கொள்கிறார்கள் என்பதை வாசுமுருகவேலின் மிக இயல்பான கூறுமுறையை சுட்டிக்காட்டி பேசினார். சுசித்ரா, இந்த கதைகளின் மூலம் Statelessness அல்லது அன்னியமாதல் என்ற உணர்வை மிக புதிய கோணத்தில் புரிந்து கொள்ள முடிகிறது என்றார். கடலூர் சீனு, இந்த அமர்வில் ஒரு கேள்வியை முன்வைத்தார். ’’ஈழ இலக்கியம் ஒரு தவிர்க்க இயலாத இடத்தை தமிழிலக்கியத்தில் வசிக்கிறது. அதை தீவிர இலக்கியத்திற்குள் வருங்காலத்திலும் வைத்துக்கொள்ள ஈழ எழுத்தாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” அகரன் அதற்கு, “சமீப காலத்தில் சயந்தன் எழுதிய ஆதிரை போன்ற பெரு நாவல்களை எழுதுவதே அதற்கு பதிலாக அமையும் என்று நினைக்கிறேன்’ என்றார். இதைத் தொடர்ந்து ஜெ இரண்டு கேள்விகளை முன்வைத்தார். “ஈழப்போரில் ஒற்றைச் சார்பு நிலையில் இருந்து கொண்டு, ஒரு பெரு நாவலை எழுதிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு அகரன் “இதற்கு முந்தைய தலைமுறையில் அந்த பிரச்சனைகள் இருந்தது உண்மை. ஆனால், இப்போதைய எழுத்தாளர்கள், அதை கடந்த முழுமைப் பார்வையை நோக்கியே செல்கிறார்கள்” என்றார்.

’ஆய்வும் புனைவும்’ என்ற தலைப்பில் எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு உரை நிகழ்த்தினார். புனைவு என்பது தன்னிசையாக வருபதல்ல. கதைக்களத்திற்கேற்ப புனைவாசிரியர் ஆய்வுகளைத் தேடி தேவையான தகவல்களை, வரலாற்று தொடர்புகளை கொண்டே ஒரு நாவலை கட்டமைக்க முடியும். புனைவாசிரியன் வரலாற்றில் உள்ள இடைவெளியை நிரப்புபவன். அப்படி ஆய்வுகள் சார்ந்து எழுதப்பட்ட தீவிர இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டு அதன் சிறப்பம்சங்களை அல்லது அதில் இருக்கும் விமர்சனங்களை அவர் முன்வைத்தார். பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, பாலகுமாரனின் ‘உடையார்’, சு. வெங்கடேசனின் ’காவல்கோட்டம்’, பூமணியின் ’அஞ்ஞாடி’, வென்னிலாவின் ‘நீரதிகாரம்’ என்று பல நாவல்கள் குறித்து பேசினார். ஒரு சமூக நிகழ்வு சார்ந்து நாவல்கள் எழுதப்படலாம் என்பதற்கு கீழ்வெண்மனி படுகொலை குறித்த ‘கரிசல், சென்னல், குருதிப்புனல்’ ஆகிய நாவல்களை குறிப்பிட்டார். ஒரு காலத்தின் தரிசனத்தை சொல்லும் நாவலாக அத்தகைய நாவல்கள் இருக்கவேண்டும் என்று ஜெ குறிப்பிட்டார். ஆய்வு சார்ந்த நாவல்கள் ஒரு புனைவாசிரியரின் சொந்த விருப்பத்தின் பேரில் ஒரு தரிசனத்தை நோக்கிய தேடலின் விளைவாகவே அமைய வேண்டும். ஆய்வு கோப்புகளின் தொடங்கி அதன் பிறகு அதை நாவலாக மாற்ற முயற்சித்தால், அது ஒரு தகவல் அளிக்கும் நூலாகவே நின்றுவிடும் என்றார்.
கடலூர் சீனு ’அபுனைவு பயண இலக்கியம்’ சார்ந்து ஒரு அமர்வை நடத்தினார். ஆதிகாலத்தில் இருந்தே பயண விழைவு எப்படி நாகரிகத்தை உருவாக்கியது என்று தொடங்கி, புத்தகங்களின் தொடக்க காலத்தில் எப்படி அதிகாரம், வணிகம், மதம் சார்ந்த பயண நூல்கள் வெளிவந்தது என்று கூறினார். நவீன உலகத்தில் கப்பல் பயணங்களின் சுவாரஸ்யங்களை முன்வைத்து பேசினார். டார்வினுக்கு பிறகான பயணங்கள் பல உயிரியல், தாவரவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த தேடல்களாக அமைந்தன என்றார். ஆங்கிலேயர்கள் அவர்கள் சென்ற தேசங்களில் இருக்கும் நிலம் மற்றும் மக்கள் சார்ந்த தகவல்களை பல பயணக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார்கள். ஒரு தேசத்தின் பெருமையைக் கூறும் கதைகள், தேசமற்றவர்களின் கதைகள் என்று உலக அளவில் பயணம் சார்ந்து வாசித்தால் மட்டுமே ஒரு பெரும் உலகப்பார்வை நமக்கு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய வரலாற்றை பற்றிய அன்னியர்களின் சித்திரங்கள் நம் தேசத்தை புதிய கோணத்தில் அணுகி அறிந்திட வழிவகுக்கும் என்று குறிப்பிட்டு அந்த வரிசையில் Magesthenes, சிங்க மடாலயம், உப்புவேலி முதலிய நூல்களை குறிப்பிட்டார். இந்திய வரலாற்றின் பல கோணங்களை அறிந்து கொள்ள தியோடர் பாஸ்கரன் அவர்களின் நூல்கள், விவேகானந்தரின் ’கிழக்கும் மேற்கும்’ ஆகிய நூல்களை குறிப்பிட்டார். நவீன எழுத்தாளர்கள் தாங்கள் செய்யும் பயணங்கள் பற்றி எழுதும்போது அது ஒரு தனித்த மதிப்பை பெறுகிறது என்றார். ஏனெனில் அது எழுத்தாளர்களின் பார்வையில், அவர்களது படிம வெளியின் நோக்கில் எழுதப்படுபவை. A.K. செட்டியார் எழுதிய ‘பர்மா வழிநடைப் பயணம்’ தொடங்கி சு.ரா, தி.ஜா ஆகியோரது பயண நூல்களை குறிப்பிட்டார். புனைவில் இருக்கும் பயண எழுத்து மற்றும் பயண நூல்களின் இலக்கியத் தன்மை குறித்த கேள்விகள் விவாதிக்கப்பட்டன.
’தேவிபாரதியின் படைப்பில் வஞ்சமும் மன்னிப்பும்’ என்ற தலைப்பில் சரண்யா பேசினார். அவரது சில கதாபாத்திரங்களை மையமாக கொண்டு அவர்களின் வஞ்சம் குறித்து விவாதிக்கப்பட்டது. குமரப்ப பண்டிதனின் மிக மோசமான சமூக நிலையைத் தாண்டி அவர் வெறுப்பு அல்லது எதிர்ப்பை தெரிவிக்காமலே எப்படி இருக்கிறார்- அதிலிருந்து அவர் விடுதலை அடைகிறாரா, வேலம்மாவின் உச்சபட்ட வெறுப்பின் காரணம் என்ற இருகோணங்கள் அதிகம் விவாதிக்கப்பட்டது. வேல்லம்மா வெறுப்பையே தன் சுயமென ஆக்கிக்கொண்டவள், அதைத் தாண்டி அவளால் எதையுமே சிந்திக்க முடியாது என்று சரண்யா குறிப்பிட்டார். வலி ஒரு மனிதனை மூன்று திசை நோக்கி கொண்டு செல்கிறது. குமரப்ப பண்டிதனை ஆக்கம் நோக்கி, வெல்லமாளை அழிவு நோக்கி, நிழலின் தனிமையில் ஒரு அதிகாரச் சுழலை நோக்கி (The exploited becomes the exploiter eventually) என்று தன் பார்வையை முன்வைத்தார். குமரப்ப பண்டிதரை பற்றி கூறும் போது, அகரமுதல்வன் தேவிபாரதியின் எழுத்தின் வன்மத்தை இரண்டு விதமாக கையாள்கிறார் என்றார்- லௌகீக வன்மம், சமூக வன்மம். சமூக வன்மத்தை அவர் பெரும்பாலும் காட்டிச் செல்கிறார். லொகீக வன்மத்திற்கு விடை தேடுகிறார். விவாதத்தின் இறுதியில் அவரது எழுத்தில் மன்னிப்பு இருக்கிறதா என்பது பெரும்பாலும் சந்தேகமே என்று தான் அனைவருக்கும் தோன்றியது.
***
சுசித்ரா ‘இருத்தலியத்திற்கு மேலுள்ள இருப்பு’ என்ற தலைப்பில் கரமசோவ் பிரதர்ஸ் இல் வரும் அல்யூஷாவின் Liberation அடையும் பகுதி மற்றும் ஐசக் டெனிசனின் The Wine of the Tetrarch என்ற கதையையும் முன்வைத்து இருத்தலியல் துன்பத்திற்கு மேலாக இருக்கும் தூய இருப்பை அடைய முயலும் வழிகளை தத்துவ சிந்தனைகளைக் கொண்டு ஆராய்ந்து ஒரு சிறந்த உரை ஆற்றினார். அல்யூஷா தன் குரு இறந்ததும் ஒரு பெரும் வெறுமையை அடைகிறான். தன் குரு உயிர்த்தெழுந்து வருவாரா என்ற எண்ணம் சுய ஏமாற்றமளிக்கும் ஒன்று என்பதை அறிந்து மிகவும் சோர்வுற்று இருக்கிறார். அவன் குஷென்காவை காணச் சென்றதில் அவர்களுக்குள் ஏற்படும் உரையாடல் இருவரையும் விடுதலை செய்கிறது. முதல் முறையாக அல்யூஷா தன் வாழ்வில் ‘Other’ என்பதை உணர்ந்துகொள்கிறான். சோபன்ஹூவரின் தத்துவம், நீட்ஷேவின் தத்துவம் ஆகியவற்றை பார்த்தால், வாழ்க்கையின் துயரை மூன்று விதமாக கையாள முடியும் என்று சுசித்ரா கூறினார். Renunciation – Materialistic approach – Accept its tragedy and affirm it. ஆனால் அல்யூஷா இந்த எதிலும் செல்லாமல் உலகியலில் இருக்கும் goodness நோக்கி செல்கிறான். அவன் குஷென்காவிடம் இருந்து விடைப்பெற்று மீண்டும் தேவாலயத்திற்கு வந்த பிறகு அவனுக்கு ஏற்படும் கணவில் இயேசுவின் first miracle என்று அழைக்கப்படும் நிகழ்வை காண்கிறான். அங்கு இயேசு தண்ணீரை வைனாக மாற்றுகிறார். அது முடிவில்லாத உலகியல் இன்பத்தை குறிப்பதாக இருக்கிறது. ஐசக் டெனிசனின் கதையில் இந்த மாற்றம் தலைகீழாக நிகழ்கிறது. பாரபாஸிற்கு வைன் தண்ணீராக மாறுகிறது. அஜிதன் இந்த தலைகீழ் தன்மையை சுட்டிக்காட்டி அறமும் (Ethics) அழகியலும் (Aesthetics) எப்படி ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று இது உணர்த்துகிறது என்றார் (Water- உலகியல், Wine – Aesthetics, Blood – Ethics). இதே கரமசோவ் பிரதர்ஸில் வரும் மித்யா கூறும் அழகியலுக்கும் அறத்திற்குமான போராட்டம் என்ற கூற்று இங்கு பொய்யாகிறது என்றும் அஜிதன் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து சுசித்ரா சில தத்துவ சிந்தனைகளை அல்யூஷா அடையும் goodness உடன் இணைத்துப் பேசினார். பீட்டர் அபெலார்ட் என்பவர் ‘Christ’s death is a a symbol of creativity and moral act’ என்கிறார். யேசு நம் பாவங்களுக்காக உயிர் துறந்தார் என்ற கூற்று இங்கு மாற்றமடைகிறது. ஐரிஸ் முர்டாக் கூறும் unselfing மற்றும் சிமோன் வெயில் கூறும் Altruism உம் இந்த உலகியல் நன்மை நோக்கி செல்வதே இருத்தலியல் துயரில் இருந்து விடுதலை அளிப்பது என்னும் கூற்றுக்கு வலுசேர்க்கிறது. இந்த அமர்வு மேலும் பல கிளாசிக் படைப்புகளை படிக்க வேண்டும், மீண்டு எழுந்து வரும் இந்த தத்துவ சிந்தனைகளை மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அளித்தது.
***

கன்னட எழுத்தாளர் விக்ரம் அவர்கள் ‘The craziness of Shivarama Karanth’ என்ற தலைப்பில் சிவராம காரந்த் அவர்களை அறிமுகம் செய்யும் விதமாக ஒரு உரையாற்றினார். விக்ரம் சிவராம காரந்த் பிறந்த பகுதியைச் சேர்ந்தவர். சிவராம காரந்தை எழுத்தாளராக அறியும் முன்பே அவரது ரசிகனாக சிறுவயதிலிருந்து ஆனேன் என்றார். அவர் யோசித்தே பார்க்க முடியாத அளவிற்கு பலவிதமான துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். இளமையில் அவர் அடைந்த துயர்களால் அவரது ஆளுமை உருவானது என்றார். முக்கியமாக மூன்று காரணிகள், இயற்கை சீற்றங்கள், மலேரியா, தேசிய விடுதலைப் போராட்டம். அவரது ‘Rush’ ஏ அவரை இயக்கியது என்றார். அதனால் தான் அவர் கவிஞன் மட்டும் ஆகவில்லை என்றும் நாம் புரிந்து கொள்ளலாம், ஏனென்றால் கவிதைக்கு ஒரு நிதானம், அமைதி தேவைப்படுகிறது என்றார். அவரது சுயசரிதையில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்களைக் கூறி அந்த புத்தகத்தையும் பரிந்துரைத்தார்.
***
சபரிஷ் ‘இவ்வாறு நான் வாசகனானேன்’ என்னும் தலைப்பில் எப்படி படிம உலகுக்குள் நுழைய முடியாத ஆரம்ப கட்ட வாசக நிலையில் இருந்து பல நண்பர்கள் வாசகர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல்கள் மூலமாக ஒரு நல்ல வாசகனாக மாறினேன் என்று கூறினார். மூன்று பெர்னார்கள், சிலிர்ப்பு, யானம் ஆகிய கதைகளைக் கொண்டு இதை விளக்கினார். வெண்முரசு தன் வாசிப்பை எப்படி மேலும் மேம்படுத்தியது என்றும் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சுசித்ரா இந்த அமர்வில் ஒரு கேள்வி எழுப்பினார். நன்பர்களின் உரையாடல் மூலமாக நீங்கள் சில அறிதல்களை அடைகிறீர்கள். ஆனால், தனிப்ப்ட்ட அளவில் ஒரு வாசகர் தன் சொந்த அனுபவங்கள் சார்ந்து, தனக்கு பிடித்த வேறு சில துறைகளின் அறிவைக் கொண்டு ஒரு தனிப்பட்ட பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளதா? அதை நோக்கிய பயணத்தில் இருப்பதாகவே சபரீஷ் பதிலளித்தார்.

இறுதியாக, ‘நினைவுக்கலை’ என்ற அமர்வை திருமூல நாதன் நடத்தினார். Short term memory மற்றும் Long term memory எப்படி செயல்படுகிறது. அதை எப்படி பயிற்சிகள் மூலம் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று விரிவாக விளக்கினார். ஒரே சமயத்தில் ஏழு விதமான செயல்களை (கவனகப் பயிற்சிகள்) நினைவில் வைத்து செய்து காட்டினார். இந்த பயிற்சி அல்லது இதுபோன்ற பயிற்சிகள் எப்படி ஒரு புனைவெழுத்தாளனுக்கு மிகவும் தேவை என்று ஜெ தன் கருத்துகளை தெரிவித்தார். ஒரு பெரு நாவலை எழுதும் கனவுடன் ஒருவன் இருக்கிறானென்றால் அவனுக்கு நினைவே பெரும் சொத்து என்றார். வெண்முரசை நினைவில் இருந்து எழுதிய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
இவ்வாறு பதினெட்டு அமர்வுகளுடனும், அதைத் தாண்டிய ஒருங்கிணைக்கப்படாத இரவு நேர கலந்துரையாடல்களுடனும் இந்த வருட காவிய முகாம் பல அறிதல்களை, படிக்க வேண்டிய பல புதிய நூல்களை அளித்துவிட்டு சென்றிருக்கிறது.

Leave a Reply