வானுலகு நோக்கி

”அந்த மூலையில் கிறுஸ்துவின் பெரிய உருவப்படம் பதிக்கப்பட்டிருந்தது, பொதுவாக மக்களை கொடுமை செய்யும் எல்லா இடங்களிலும் இருப்பதைப் போல” என்று சிறை வளாகத்தில் இருக்கும் யேசுவின் படத்தை டால்ஸ்டாய் விவரிக்கிறார். சிறையின் பயன் என்ன? யார் குற்றவாளிகள்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடும் நாவலே ‘Resurrection’.

இம்மானுவல் காண்ட் தன் அறவியல் தத்துவத்தில் ‘radical evil’ என்ற கருதுகோளை முன்வைக்கிறார். டால்ஸ்டாய் எழுதிய ‘Resurrection’ நாவலில் மனிதனின் radical evil எப்படி செயல்படுகிறது என்ற பார்க்கமுடியும் என மானசா புக் கிளப்பில் சைதன்யா சில பகுதிகளில் குறிப்பிட்டார். ‘Radical’ என்றால் அதன் லத்தீன் மொழி அர்த்தத்தில் ‘Root’ என்று பொருள்படும். ’தீமையின் வேர்’ நோக்கி சென்று டால்ஸ்டாய் கண்டடைவது என்ன என்ற கேள்வியை நோக்கி இது அழைத்துச் செல்கிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி நடைப்பெற்ற புக் கிளப் சந்திப்பில் இருபது பேர் வரை கலந்து கொண்டோம். நாங்கள் இருவரும் அமெரிக்கா பயணத்தின் போதே நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருந்தோம். இங்கு வந்து சேர்ந்தது 24 ஆம் தேதி நள்ளிரவில். ஒரே நாள் மட்டுமே மிச்சம் இருந்தது. 25 ஆம் தேதி இரவு மூன்று மணி வரை படித்தும் இறுதி பத்து அத்தியாயங்களை என்னால் சரியாக படிக்க முடியவில்லை. ஆனால், இந்த விவாத்திற்கு பிறகு இப்போது மீண்டும் நாவலின் இறுதி முப்பது சதவீதத்தை மீண்டும் படித்தேன், இதை எழுதுவதற்கு முன்பாக.

மானசா புக் கிளப் – ஏப்ரல் 2026

காண்டின் ‘radical evil’ என்ற கருதுகோளை இப்படி புரிந்து கொள்ளலாம். மனிதன் தன் பலவீனங்களின் பிடியில் தவறுகளை செய்கிறான். அந்த பலவீனங்கள் நம் விழைவினால் ஏற்படுவது. அந்த விழைவு மூன்று விதமாக வெளிப்படும் என்கிறார். அந்த வெளிப்பாடு மனிதனின் அறச் செயல்பாடுகளின் எல்லைகளுக்குள் நிகழ்வது (spectrum). அது (1) சுய பாதுகாப்பு (self preservation) – Animality, (2) மற்றவர்களிடம் அங்கீகாரம் கோருதல் – Humanity, அதனால் வரும் பொறாமைகள், (3) இறுதியாக moral law என்ற மனிதனுக்கு வகுக்கப்பட்ட சட்டத்திற்குள் செயல்படும் இயல்பைக் கொண்டிருத்தல் (good) – personality. இது கிறிஸ்தவ கருதுகோளின் உள்ளே செயல்படும் ஒரு கோட்பாடுதான். காண்டின் அறவியல் தத்துவம் பலவகையில் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால், இந்த நாவலில் இந்த கருதுகோள் எவ்வாறு பொருந்திவருகிறது; டால்ஸ்டாய் தனக்காக கிறுஸ்தவத்தில் எப்படி அதை கண்டுகொள்கிறார் என்பதையே நாம் பார்க்க வேண்டும்.

முதலில், நாவலின் கதையைப் பார்க்கலாம். டால்ஸ்டாயின் கதாபாத்திர வடிவமைப்பு, அதன் வண்ணங்கள், அதன் பரிணாமம் ஆகியவையே என்னை முதலில் பிரம்மிக்க வைத்தன. ஏனெனில், டால்ஸ்டாயை நான் இப்போது தான் முதலில் வாசிக்கிறேன். அவரது ‘போரும் வாழ்வும்’ மற்றும் ‘அன்னா கரீணா’ ஆகியவற்றிற்கு பிறகான வெறுமை, அதன் பிறகான அவரது ஆன்மிகத் தேடலின் விளைவு என்றே அவரது இறுதி நாவலான இந்த ‘Resurrection’-ஐ காணலாம். கதையின் நாயகன் Nekludoff பிரபுக்களின் வர்க்கத்தை சேர்ந்தவன். அவன் Katusha என்ற பெண்ணை நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் காண்கிறான். அவன் Jury யின் பகுதியாக அதில் செயல்படுகிறான்.  Katusha கொலைபழி சுமத்தப்பட்ட ஒரு பாலியல் தொழிலாளி. அவளை அந்த கோலத்தில் பார்ப்பது, அவன் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. ஏனெனில் அவள் அவனது முதல் காதலி. அவளை சிறுவயதில் தன் அத்தைகளின் வீட்டில் காண்கிறான். இருவருமே அப்போது தூய எண்ணங்களைக் கொண்ட துடிப்பான வாலிபர்கள். ஆனால், Nekludoff தன் அதிகாரவர்க்க வாழ்க்கைப் பார்வையில் அடித்துச் செல்லப்படுகிறான். ஒரு இளைஞனாகும் போது வேட்கை அவனது தூய மனதை வெல்கிறது. அவன் katusha வை கைவிட்டு, ராணுவத்தில் சேர்கிறான். அது அவனை மேலும் இறுக்கமாக்குகிறது. ஆனால், அவன் இயல்பில் ஒரு சிந்தனையாளன். அவன் தன் வாழ்க்கையை அவ்வப்போது திரும்பி நின்று பார்க்கிறான். ரானுவத்தில் இருந்து வெளியேறி ஒரு ஓவியக் கலைஞனாக ஆக முயற்சித்துக் கொண்டிருக்கிறான். தன் நிலங்களை அனுபவிப்பதில் அவனுக்கு கேள்விகள் எழுகிறது. நில சீரத்திருத்தம் சார்ந்த கேள்விகள் அவனை ஆக்கிரமிக்கிறது. அதற்கும் அவன் விடை தேடி அடைகிறான். அவன் கல்யாணம் செய்து கொள்ள இருக்கும் Missy korchigan என்ற பிரபு குடும்பத்தவளும் அவனுக்கு நாளடைவில் குமட்டலை தருகிறாள். எளிமையாக சொல்வதென்றால், அவன் ஒருவித வெறுமையில் இருக்கிறான் (midlife crisis என்று சொல்லலாம்). இந்த சந்தர்பத்தில் அவன் Katusha வின் நிலையை பார்த்ததும், அவனே அவளின் அந்த நிலைக்கு காரணம் என்ற குற்றவுணர்ச்சியை அடைகிறான். jury க்களின் கவனக்குறைவால், குற்றமற்ற அவளுக்கு சைபீரியாவில் நான்கு வருட சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அவளை அந்த நிலையில் இருந்து விடுவிப்பதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்று உறுதி கொள்கிறான்.

அவனது இந்த சொந்த குற்றவுணர்ச்சி விரிந்து மேலும் மேலும் பெருகுகிறது (மானஸா கூடுகையில், சபரிஷ்). அவன் Katusha வை சிறையில் சென்று பார்க்கும் போது, அவனுக்கு சிறை உலகம் திறந்து கொள்கிறது. அதன் வாயிலாக அவன் வாழ்க்கையின் மிகப் பெரிய கேள்விக்கு தள்ளப் படுகிறான். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை எந்த அடிப்படையில் குற்றவாளி என்று கூறி தண்டிக்கிறான்; தண்டிப்பவர்களின் அறவுணர்வு எந்த நிலையில் இருக்கிறது; யார் உண்மையில் குற்றம் செய்தவர்கள், தண்டிக்கப்பட்டவர்களா, தண்டிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளா அல்லது அந்த அமைப்பா? இந்த தேடலின் இறுதியில் அவன் அடையும் விடையும் அதன் விளைவான மீட்புமே இக்கதை.

தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை எளியவர்கள், அப்பாவிகள் என்று Nekludoff மிக விரைவில் புரிந்து கொள்கிறான். டால்ஸ்டாய், தண்டிக்கப்பட்டவர்களை ஐந்து விதமாக பிரிக்கிறார், அவர்களின் மேல் இருக்கும் குற்றத்தின் அடிப்படையில்; ஆனால், அந்த குற்றத்தை செய்ய தூண்டியது யார்? எது? இந்த கேள்வியின் விளைவாக அவர்கள் அனைவருமே நிரபராதிகள் என்றே அவர் முடிவு செய்கிறார். அடுத்ததாக Nekludoff இன் இந்த கேள்வி, தண்டிக்கும் இடத்தில் இருப்பவர்களை, அமைப்பை நோக்கி திரும்புகிறது. அதற்கு அவ்வளவு எளிதில் அவனால் விடை தேட முடியவில்லை. ஏனெனில், சக மனிதனை எந்தவித மதிப்பும் அன்பும் இல்லாமல் நடத்த எவ்வாறு இயல்கிறது என்ற கேள்விக்கு இன்றும் நம்மால் எளிதில் பதிலளித்துவிட இயலாது.

சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள்

ஒவ்வொரு முறையும் katusha வை சென்று சந்திக்கும் போதும் அவனுக்கு மற்ற கைதிகள் அறிமுகமாகிறார்கள். சிறையின் அமைப்பு அவனுக்கும் நமக்கும் ‘Moral nausea’ என்று டால்ஸ்டாய் குறிப்பிடும் ஒவ்வாமையை அளிக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவினரை அவர்களின் பிறப்பு, தோற்றம் ஆகியவற்றை கொண்டு மட்டும், இவன் குற்றம் புரியும் வாய்ப்பு கொண்டவன் என்ற முடிவு எளிதில் எட்டப்படுகிறது. அவன் சமூகத்தில் இருந்து பிரிக்கப்படுவது நல்லது என்ற முடிவு எடுக்கப்படுகிறது. ‘Greatest good for greatest numbers’ என்ற ‘Utilitarian’ பார்வை இங்கு யாருக்கு சாதகமாக பயன்படுத்தப்படுகிறது என்று கேட்கிறார். இங்கு நாம் காண்ட் கூறும் சுய பாதுகாப்பு என்னும் மன நிலையை காணலாம். ஒரு சாராருக்கு அந்த நம்பிக்கையை அளிக்க சிறை என்ற அம்சம் கட்டமைக்கப்பட்டதாக பார்க்க முடியும். இந்த அம்சம், சிறைக்கைதிகளை நகரின் வழியாக சைபீரியா செல்லும் ரயிலுக்கு நடந்தே விலங்கிட்டு கொண்டு செல்வதில் பொருத்திப் பார்க்கலாம். இவர்கள் தீயவர்கள் என்று மனதில் நிறுத்திக் கொண்டு, நாம் நல்லவர்கள் என்ற எண்ணத்தை அதன்மேல் கட்டமைத்து கொள்கிறோம்.

சரி, Nekludoff இந்த ஒவ்வாமையை, அதை உருவாக்கும் இந்த அதிகாரிகளையும் அமைப்பையும் எவ்வாறு புரிந்து கொள்கிறான்? அதை எவ்வாறு சீரமைக்க முடியும் என்று நினைக்கிறான்? டால்ஸ்டாய் வடித்திருக்கும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் Nekludoff- இன் அந்த பரிணாமத்திற்கு காரணமாக அமைவதை நாம் காணலாம். Taras மற்றும் Theodesia வின் காதல் ஓர் உண்ணதமான உதாரணம். Theodesia மிக இளம் பெண்ணாக Taras-க்கு மணம் செய்து வைக்கப் படுகிறாள். அவளுக்கு ஏனோ அவனுடன் வாழ பிடிக்கவில்லை. அதனால் அவனுக்கு விஷம் கொடுத்துவிடுகிறாள். ஆனால் Taras அதில் தப்பிவிடுகிறான். அவளை அவனுடைய அம்மா வெறுக்கிறாள். அவள் சிறைக்கு செல்கிறாள். ஆனால், அவனுடைய அப்பா மனம் இறங்கி, அவளை பெயிலில் கொண்டுவர முயற்சி செய்ய Taras- ஐ தூண்டுகிறார். Theodesia மிகவும் அப்பாவியான சூட்டிகையான பெண். அவள் ஏன் அப்படி செய்தாள் என்பதை அவளாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவனுடைய அம்மாவும் அவளை ஏற்றுக் கொள்கிறாள். தியோடிசியாவும் தாரஸும் இணைபிரியாத காதலர்களாக, குடும்பத்திற்கு உழைக்கும் உழவர்களாக மகிழ்ந்து வாழ்கிறார்கள். ஆனால், அவளுக்கும் சைபீரியாவிற்கு செல்லும் தண்டனை தீர்ப்பாகிறது. தாரஸ் அவளுடன் தானும் செல்வதாக முடிவு செய்கிறான்.

Kryltzoff என்ற மற்றொரு கதாபாத்திரமும் Nekludoff இன் மாற்றத்தை பெரிதும் பாதிக்கிறார். அவர் மிக இளம் வயதில், எந்த குற்றமும் செய்யாமலேயெ ஒரு அரசியல் கைதியாக கைது செய்யப்படுகிறார். சிறையில் தன் வயதை ஒத்த இளம் பிள்ளைகளுடன் எந்த கள்ளமும் இன்றி பொழுதை கழிக்கிறார். ஆனால், தன்னுடன் இருந்த இரு நண்பர்களை தூக்கிலிடப்போவதாக வரும் செய்தியை இளைஞனான Kryltzoff-ஆல் உள்வாங்கமுடியவில்லை. அந்த இருவரை தவிர அனைவரையும் அறைக்குள் அடைத்துவிட்டு அவர்களை வராண்டாவில் இழுத்துச் செல்கிறார்கள். இவனுடைய நண்பன் எங்கு செல்கிறோம் என்பதை ஒருவாறு ஊகித்து செல்ல மறுக்கிறான். அவனுடயை அலறல் மட்டுமே சிறிது நேரம் கேட்கிறது. அந்த வார்டின் வாட்ச்மேன் தூக்கிலிடப்பட்ட செய்தியை சொல்லும் விதம் மிக குரூரமானது. இவர்களிடம் வந்து, ‘அவ்வளவொன்றும் பயங்கரமாக இல்லை அதை பார்ப்பதற்கு. தோள்கள் குலுங்கிக்கொண்டன. பிறகு ஒரு சத்தம் எழும்பியது. பின்னர் அடங்கியது’ என்று அந்த வன்முறையை ஒரு படக்காட்சியாக விவரித்து இயல்பாக கடந்து செல்கிறார். Kryltzoff அதன் பிறகே ஒரு புரட்சியாளனாக ஆகிறார்.

மேற்கண்ட நிகழ்வு போல பல கொடூரங்கள் சிறையில் நடப்பதை இந்த நாவலில் விரிவாக நாம் காண்கிறோம். தனிமை சிறையில் அடைப்பட்டிருப்பவர்களின் மனநிலை, சிறையின் தூய்மையற்ற நிலை, நோய்கள், தலையில் பாதி மட்டும் மழிக்கப்பட்ட நிலையில் இருக்கும் criminal குற்றவாளிகள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை சந்திக்கும் போது இருக்கும் அமைப்பு (இரண்டு வலைகள் தாண்டி தூரத்தில் மட்டுமே காண இயலும். அதுவும் அனைவரும் கத்தியபடியே பேசிக்கொள்வார்கள். பெரும்பாலும் எதுவும் கேட்காது.) இந்த அமைப்பில் இருக்கும் அதிகாரிகள், வேலை செய்பவர்களின் நிலையையும் டால்ஸ்டாய் மிக விரிவாக வர்ணித்திருக்கிறார். முன்பு கூறிய வாட்ச்மேன் போல எந்த உணர்த்திறனும் அற்றுப்போனவர்கள், சட்டதிட்டங்களும் விதிகளும் மட்டுமே சரி என்ற போலியான இறுக்காமான அறவுணர்வு கொண்டவர்கள், சிறையின் இருளில் மனதின் இருளை முழுவதும் வெளிப்படுத்துபவர்கள், இறுதியாக இன்ஸ்பெக்டராக வரும் ஒருவரைப் போல கொஞ்சம் மனிதத்தன்மை இருப்பவர்கள். இவர்களை அணுக அணுக Nekludoff மேலும் பல குழப்பங்களுக்கும், ஆற்றாமைக்கும் அதன் பிறகான் தெளிவுக்கும் வருகிறார். இவர்கள் சம்பளத்திற்காக மட்டுமா இதை செய்கிறார்கள்? அப்படியென்றால் நல்லதை செய்ய சன்மானங்கள் கொடுத்தால் மாறிவிடுவார்களா என்ற கேள்வி எழுகிறது. அந்த சிந்தனையின் நீட்சியாக அமைப்பு தான் அவர்களையும் ஆட்கொள்கிறது என்ற எண்ணத்தை அடைகிறார்.  இந்த கருதுகோளும் காண்டின் விழைவின் இரண்டாவது வெளிப்பாடாக காணலாம் (மற்றவர்களிடம் அங்கீகாரம் கோருதல்). இவர்கள் தங்கள் வாழ்க்கையின் வெற்றி என்பது அவர்களுக்கு அளிக்கப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமே என்று நினைப்பவர்கள் (Banality of evil என்ற ஹானா ஆரண்டின் கருதுகோளும் இதற்கு நெருக்கமானது – சைதன்யா) அதன் உச்சமான சித்தரிப்பு, சைபீரியா ரயிலுக்கு செல்லும் நடை பயணத்தின் போது அதீத வெயிலினால் ஏற்படும் இரண்டு இறப்புகளை அதிகாரிகள் கையாளும் விதம். அந்த இறப்பிற்கு யார் பொருப்பு என்ற கேள்வியை அங்கு Nekludoff மீண்டும் மீண்டும் கேட்டு யோசித்து பார்க்கிறார். அமைப்பு இல்லையென்றால் இதே அதிகாரிகள் எப்படி ஓர் இறப்பை அணுகுவார்கள் என்று கேட்டுப்பார்க்கிறார். ஆம், மனிதன் எப்போதும் இயல்பாக நன்மை செய்யக்கூடியவனே என்ற எண்ணம் அவருக்கு மேலெழுகிறது (காண்ட் கூறும் personality).  

நாவலில் வரும் மற்றொரு சுவாரஸ்யமான வகை மனிதர்கள், அரசியல் கைதிகள். அவர்கள் துன்பங்களை துணிந்து சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள். கைதிகளாக ஆவதில் பெருமை கொள்கிறார்கள். சோசியலிச கொள்கைகள் பேசுகிறார்கள். அவர்களின் நேர்மையான எண்ணத்தை டால்ஸ்டாய் அங்கீகரித்தாலும், அவர்களது பாவனையை அவர் மிகவும் விரிவாகவே ஆராய்கிறார். அரசியல் இளைஞர்களை எப்படி ஆட்டுவிக்க கூடியது என்ற சித்திரத்தை அளிக்கிறார்.

நாவல் எழுதப்பட்ட காலகட்டத்தில், கம்யூனிசம் வளர்ந்து செழிக்க ஆரம்பித்துவிட்டது. டால்ஸ்டாய் கம்யூனிச சிந்தனையை, அதன் பலவீனங்களை ஒரு சமகால எழுத்தாளாராக மிக அழுத்தமாக முன்வைக்கிறார் என்பது ஆச்சரியமாகவும், அதே சமயம் எழுத்தாளரின் துல்லியமான சமூகப்பார்வையின் வலிமையையும் உணரச் செய்தது. அவர் ஒரு விவசாய சமூக அமைப்பை ஆதரிக்கிறார். செர்ஃப்டம் ஒழிக்கப்பட்ட பிறகு, விவசாய நிலத்தை பொதுவுடைமையாக வைத்திருந்த காலம் அது. ’மிர்’ (obschchina) என்ற பஞ்சாயத்து குழு போன்ற அமைப்பு அதற்கு பொறுப்பேற்றது. ஒவ்வொரு ஊருக்கும் இருப்பது. இந்த அமைப்பையே கம்யூனிஸ்டுகள் தங்கள் பொதுவுடைமை கொள்கையை வளர்த்தெடுக்கும் அடித்தளமாக பயன்படுத்தலாமா என்று சிந்தித்துள்ளனர். ஆனால், இந்த பொதுவுடைமை அமைப்பில் பிற்காலத்தில் நிலம் யாருக்கும் சொந்தமில்லாதால் பிரச்சனைகள் எழுந்து அதிலிருந்து வெளியேறினர். இந்த காலத்தில் பல நில சீரமைப்பு திட்டங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஜியோர்ஜிசம் என்ற பொருளாதார தத்துவம். டால்ஸ்டாய் அதை தன் சொந்த வாழ்க்கையிலும் இந்த நாவலிலும் கூட வலியுறுத்துகிறார்.

ருஷ்ய விவசாயிகள்

இந்த வலுவான சமகால அரசியல் கருத்துகளை பேசும் டால்ஸ்டாய், ஒற்றைபடையாக எதையும் முன்னிறுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அவர் எல்லா விதமான அமைப்புகளையும் அதன் பிரச்சனைகளையும் பேச முயற்சிக்கிறார். விவசாயிகளுக்கு உள்ளேயும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விவரணைகள் அதற்கு உதாரணம். அதே போல, விவசாயிகள் நகரத்தில் வாழ்வை நோக்கி வந்து அதில் நிம்மதியை ஓரளவு அடைவதையும் அவர் எழுதுகிறார். முதலாளித்துவ அமைப்பு பற்றிய எண்ணங்கள் வளர்ந்து வருவதை அவர் பதிவு செய்கிறார்; உதாரணமாக ஒரு ரிக்‌ஷா ஓட்டுனர் அவரிடம் பீட்டர்ஸ்பர்க்கில் கட்டப்படும் பெரிய மாளிகை ஒன்றை பெருமையாக காட்டுகிறார். அதற்கு Nekludoff, இந்த மாளிகையால் யாருக்கு பயன் என்ற அலுத்துக் கொள்கிறான். ஏன் அப்படி கேட்கிறீர்கள், அது வேலை வாய்ப்பு உருவாக்குகிறதல்லவா? என்கிறார்.  

19 ஆம் நூற்றாண்டு பீட்டர்ஸ்பர்க்

இதை எல்லாம் படிக்கும் போது எழுந்த பெரும் கேள்வி, ஏன் டால்ஸ்டாய் தன் நாவலில் இவ்வளவு பேசுகிறார்? மதம், அரசியல், சமூகம் எல்லாவற்றிலும் அவரது எண்ணங்களை கிட்டத்தட்ட வெளிப்படையாகவே வைக்கிறார். அதை எங்கள் புக்’ கிளப் கூடுகையில் கேள்வியாக முன்வைத்தேன். சைதன்யா கூறினார், டால்ஸ்டாய் ’கலை’யின் அனைத்து எல்லைகளையும் கடந்து செல்பவர். நாம் கலை என்று வகுத்திருக்கும் வரையறைகளுக்குள் சிக்காதவர் என்று. ‘What is art?’ என்ற அவரது புத்தகத்தில் இருக்கும் பகுதிகள் இந்த கருதுகோளுக்கு இணங்க இருக்கின்றன. உதாரணத்திற்கு,

“A true work of art is the revelation of a new conception of life arising in the artist’s soul, which, when expressed, lights up the path along with humanity progresses”.

எங்கள் கூடுகையில் பேசப்பட்ட நாவலின் மற்றொரு முக்கியமான அம்சம், டால்ஸ்டாய் கிறிஸ்தவத்தை எப்படி பார்க்கிறார் என்பதைப் பற்றி. நவீன் கூறினார், அவரது ‘Confessions’ என்ற புத்தகத்தில் கடவுள், மதம் ஆகியவை குறித்து பேசுகிறார். அவருக்கான, ஒரு கிறிஸ்தவத்தை அவர் தேடிக் கொண்டார். அதற்கு பிறகு வந்த முக்கியமான பெரிய படைப்பு, இந்த நாவல் என்பதை கவனிக்க வேண்டும். இதிலும் பல மதம் சார்ந்த கேள்விகளை, அதன் வடிவங்களை அவர் ஆராய்கிறார். நாவலில், தேவாலயங்கள் என்ற அமைப்பையும் கூட்டுப் பிரார்த்தனையையுமே அவர் நிராகரிக்கிறார். தற்கால கிறுஸ்தவ அமைப்பை பார்த்த எனக்கு, எப்போதும் அதுவே கிறிஸ்தவத்தின் முதல் மனப்பதிவாக எழுந்துவருவது. கிறுத்துவமும் அதன் தோற்றத்திற்கான நோக்கத்தையும் டால்ஸ்டாய் தேடிச் செல்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நாவலில் கிறிஸ்தவம் விமர்சிக்கப்பட்ட சிறந்த இடங்களில் ஒன்று, சிறையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டம். பாதிரியாரின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் சம்பளம் பற்றிய சிந்தனை, அப்பமும் திராட்சைரசமும் தருவதை எள்ளல் செய்யும் விதம் ஆகியவை அதன் அபத்தத்தை நமக்கு மிக அப்பட்டமாக காட்டக்கூடியது.

Katusha – Nekludoff காதலே இக்கதைக் களத்தின் ஒரு இணைப்புப் புள்ளி. அவர்களின் காதல் பல விதமாக எங்கள் கூடுகையில் விவாதிக்கப்பட்டது. கிருபா கூறிய ஒரு அவதானிப்பை இங்கு பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் இருவருமே தங்கள் வாழ்வில் உயிர்த்தெழுகிறார்கள். ஆனால் நெக்லுடாப் தன் மாற்றத்திற்கான அங்கீகாரத்தை, அதற்கான வழிகளை வெளியே கண்டுகொள்கிறான். ஆனால், கடூஷா தன் மனதிற்குள்ளேயே மாற்றம் அடைகிறாள் (Externalization – Internalization). அவர்களின் ஒவ்வொரு சந்திப்பிலும் அதன் பிறகான மனவோட்டங்களிலும் நாம் அவர்கள் இருவரிலும் மாற்றம் நிகழ்வதைக் காண்கிறோம். நெக்லுடாப் கடூஷாவிடம் மன்னிப்பு வேண்டுகிறான். அது கிடைத்தால் போதும் என்று நினைக்கிறான். அவளை திருமணம் செய்து கொள்ளுதல் அதற்கு மன்னிப்பாக அமையும் என்று நினைக்கிறான். ஆனால், கடுஷா அவனை மறுப்பதே இறுதியில் அவனுக்கு மன்னிப்பாக அமைகிறது. அதுவே அவனை அதைத் தாண்டிய பயணத்திற்கு இட்டுச் செல்கிறது. கடூஷா நெக்லுடோப்பை மன்னிப்பதின் வாயிலாகவும், அவனை கடந்து சென்று சைமன்சனை திருமணம் செய்து ஒரு லட்சிய வாழ்வை வாழ நினைப்பதன் மூலமாகவும் பெரும் விடுதலை அடைகிறாள்.

சிறை பிரார்த்தனையில் கடூஷா

டால்ஸ்டாயின் உச்சபட்ச புனைவுத்தருணங்களில் இரண்டை இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன். அவர்கள் இளைஞர்களாக கண்களில் காதல் உணர்ச்சிகளை கொண்டு ததும்பும் சமயத்தில் நிகழும் ஈஸ்டர் இரவு. ‘Christ is risen’ என்ற குரல்கள் எதிரொலித்துக் கொண்டிருக்க, கடூஷா அங்கு வந்திருக்கும் ஒரு பிச்சைக்காரருக்கு அளிக்கும் ஈஸ்டர் முத்தம். அதன் தொடர்ச்சியாக அனைவருக்குள்ளும் பரிமாறிக்கொள்ளப்படும் அன்பு வெளிப்பாடு.  

என்னை உணர்வெழுச்சி கொள்ளச் செய்த மற்றொரு நிகழ்வு, மனதை மிகவும் கணக்கச் செய்யும் சைபீரியா ரயிலுக்கு செல்லும் பயண விவரிப்புக்குப் பின்னர், நெக்லுடோப் தன் ரயிலில் காணும் மழை மற்றும் அதில் நனையும் பயிர்களின் காட்சி. வெயிலில் அவர்கள் நெருக்கிக்கொண்டு நடந்து சென்று, ரயிலில் அடைக்கப்பட்ட போது ஏற்படும் புழுக்கத்திலிருந்து, ஒரு மிகப் பெரிய ஆசுவாசத்தை, அணைப்பை மழையை விட வேரெதுவும் தந்து விட முடியாது. ஒரு சிறந்த படைப்பாளி அதை உணரச் செய்யும் தருணத்தில், படைப்பை தாண்டி நம்மிடம் நெருங்கிவிடுகிறார்.

எங்கள் கூடுகையில் கிருஷ்ணன் என்பவர், ’குற்றமும் தண்டனையும்’ குறித்த தனது வாசிப்பை முன்வைத்தார். ராஸ்கோல் நிக்ஹோவ் அடையும் மாற்றத்தை, விடுதலையை இப்போது மேலும் நுனுக்கமாக புரிந்து கொள்கிறேன் என்று தோன்றுகிறது. அதை தொடர்ந்து, டாஸ்டவெஸ்கி முன்வைக்கும் விடுதலையை காட்டிலும், இதில் ஏற்படும் புத்துயிர்ப்பு (Resurrection) எப்படி மாறுபட்டது என்றும் விவாதிக்கப்பட்டது. மேலும் சோனியா வெறும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கும்போது, கடூஷா எப்படி தானும் ஒரு ஆன்மிக விடுதலையை அடைகிறாள் என்பதையும் சைதன்யா சுட்டிக்காட்டினார்.

Tolstoy resurrection

இறுதியாக, நெக்லுடோப் உணரும் விடுதலை என்ன? கடூஷா தன்னை நிராகரித்த பின் தன் அறைக்கு திரும்பி வருகிறார். அவரது சிந்தனையில் ஆக்கிரமித்த எண்ணம், சிறை முகாமில் ஒழுகிய அழுக்கான தண்ணீருக்கு நடுவே உறங்கும் பதினான்கு வயது சிறுவனின் முகம். சைபீரியா செல்லும் வழியில் பல இடங்களில் கைதிகள் முகாமிட்டு தங்குகிறார்கள். நூறு பேர் மட்டுமே தங்க வசதி இருக்கும் அந்த முகாமில், நாநூறு பேர் வரை தங்குகிறார்கள். உறங்க இடமில்லாமல் குவியல்களாக இடுங்கிக் கொண்டு இரவை கழிக்கிறார்கள். அப்படியும் இடம் கிடைக்காமல் வராண்டாவில் ஒரு சிறிய அறையில் மூன்று பேர் உறங்குகிறார்கள். இரண்டு பெரியவர்களுடன் அந்த பதினான்கு வயது சிறுவன். அங்கிருக்கும் ஒரு தொட்டியில் இருந்து மிக அழுகிய வாடையுடன் நீர் ஒழுகி பரவிக் கொண்டிருக்கிறது. அந்த சிறுவன், அருகிலிருக்கும் பெரியவர் ஒருவரின் காலில் தன் தலையை வைத்து எந்த சலனமும் இன்றி உறங்குகிறான்… இவர்கள், இந்த மனிதர்கள் தாங்கள் இருக்கும் மோசமான நிலையிலும் ஒரு சிறிய சமூகமாகவே வாழ்கிறார்கள். அவர்களுக்கும் காதல் மலர்கிறது. பந்தங்கள் உருவாகிறது. அவர்களால் எப்படி ’வாழ’ முடிகிறது என்பதே நெக்லுடோபிற்கு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த எண்ணவோட்டங்களின் அலையில், பைபிளை எடுத்து சில பகுதிகளை படிக்கும் அவர், சட்டென்று ஒரு தெளிவை அடைகிறார். தன் தவறை உணராதவன், மற்றவனின் தவறை தண்டிக்க விழையும் போதே மேலும் தவறு நிகழ்கிறது என்பதை உணர்கிறார். அப்படியென்றால், தங்களை தண்டிக்கும் அதிகாரிகளை ஏதோ ஒரு வகையில் மன்னிக்கும் இடத்தில் இருப்பதால் தான், கைதிகள் அந்நிலையிலும் ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது. மாறாக நாவலில் வரும் அதிகார வர்க்கத்தினர் எல்லோரும் ஏதோ வித கசப்பில் உழன்று அழியும் நிலையிலேயெ இருக்கின்றனர். அவர்கள் வெளியே ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களது ஆன்மா அதை உணர்ந்தே இருக்கிறது. சைதன்யா கேட்ட மற்றொரு கேள்வி, எனது இந்த எண்ணத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. இந்த நாவலே டால்ஸ்டாய் தேடும் ஒரு பிராயச்சித்தமா? ஏனெனில் டால்ஸ்டாயின் வாழ்வில் ஏற்பட்ட சில பெண் உறவுகளே இந்த நாவலின் மைய கதைக்கு தூண்டுதலாக அமைந்திருக்கிறது. முதுமையில் அவர் அதற்கு கேட்கும் ‘மன்னிப்பு’ அவரை விடுதலை செய்கிறதா? நம்மை நாமே மன்னித்துக் கொள்ளும் தருணமே நாம் ஆன்மிகமாக விடுதலை அடைகிறாம். மீண்டும் பிறக்கிறோம். நெக்லுடோபும், கடூஷாவும் அவர்களை அவர்களே மன்னித்துக் கொண்டார்கள் என்றே தோன்றுகிறது. மன்னிப்பு கோரும் இடத்தில் எல்லோரும் இருந்து விட்டால், தண்டனை ஏது? சிறை ஏது?

கிறிஸ்தவத்தின் மனிதநேய சிந்தனைகள் அதிலிருந்தே பிறக்கின்றன. எளியவை அல்லது அடிப்படை என நாம் கடந்து செல்லும் சில கருத்துகள் நம் வாழ்க்கையை மாற்றக் கூடும் என்பதை இதில் உணர முடிகிறது. அப்படி எளியவகையில் புரியக்கூடிய Mount Sermon (மலைப்பிரசங்கம்) வார்த்தைகளே டால்ஸ்டாயின் மனதிற்கு நெருக்கமான பைபிள் பகுதி. ஆனால், அவற்றை உணரந்து முன்செல்ல நெக்லுடோப் போல, டால்ஸ்டாய் போல ஒரு பெரும் பயணம் தேவைப்படுகிறது.

Leave a Reply

Discover more from saaradhai.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading