உதிர்த்தெழுதல்

கி.ரா வின் ‘பிஞ்சுகள்’ குறுநாவல் குறித்த பதிவு

‘அந்த மலையின் கனத்த மௌனமே ஒரு கவர்ச்சி. அதன் பாறைகள்மேல் தேமல் மாதிரி படர்ந்திருக்கும் பாசி, இடையோடியில் முளைத்திருக்கும் பலவகைச் சிற்புற்கள், நிறம் நிறமான வடிவக் கற்கள்… பகல் இரவெல்லாம் இரைந்துகொண்டே இருக்கும் கண்ணுக்குப் படாத சிள்வண்டுகளின் இரைச்சல்’

வெங்கடேசு என்ற சிறுவனுக்கு தன் நண்பனின் அப்பா வாசிக்கும் நாதஸ்வரத்தை கேட்கும் போது மனதில் வரும் குருமலையின் காட்சிகள் இவை. ’பிஞ்சுகள்’ என்ற கி.ராவின் இந்த சிறார் நாவலில் வரும் பலவகை இயற்கை சார்ந்த சித்தரிப்புகளில் இதுவும் ஒன்று. இசை கேட்கும் சிறுவனுக்கு அவன் கண்ட மலையின் வெவ்வேறு காட்சிகள் பாடலின் அமைப்பை பொறுத்து நினைவில் எழுகிறது. இயற்கையும் இசையும் இணையும் உயர்ந்த புள்ளியை கி.ரா இதில் மிக இயல்பாக சித்தரிக்கிறார்.

மேற்கத்திய இசையில் ‘pastoral music’ என்ற மேய்ப்பு நிலம் சார்ந்த இசை வகை செவ்வியல் இசையில் மிகவும் பிரபலம். பீத்தோவன், மொசார்ட், வாக்னர் போன்ற பெரும் இசை மேதைகள் இந்த வகை இசையமைப்புகளை செய்திருக்கிறார்கள். 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் தத்துவத்தில் எழுந்து வந்த ‘Romantic era’ வின் தாக்கமாக அதைக் காணலாம். கிராமத்து வாழ்க்கையின் இனிமைகளை பேசுவதால் இந்த கதையையும் ஒரு ’pastoral literature’ என்று காண முடியும்.

boy with rod leading cattle in village

இந்த குறுநாவலில், வெங்கடேசு ஒன்பது வயதில் தன் அம்மாவை இழக்கிறான். அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் பெரியம்மை நோய் வந்து, அவன் அம்மா அதில் இறந்துவிடுகிறாள். இவன் தன் நோயின் தீவிரம் குறைந்து அம்மாவை தேடும் போது அவனுடைய பாட்டி சொல்ல இயலாமல் அழுகிறாள். நோய் தெளிந்து அவன் தன் படுக்கையில் இருந்து எழும் சமயத்தில் உதிர்ந்த அம்மை புண் பொருக்குகள் அவன் உடலை குத்தும். இந்த படிமம் என்னுள் விரிந்து அதுவே இந்த நாவலின் மையத்தை நோக்கி என்னை செலுத்துகிறது.

புண்களின் பொருக்குகள் நம் அனைவருக்கும் கிளர்ச்சியை அளித்திருக்கும். என்னுடைய அம்மை நோய் பொருக்குகளை நான் நீண்ட நேரம் கைகளில் தொட்டுப் பார்த்த நினைவுகள் எழுகிறது. அது நம் உடலின் பகுதியா? உடலே உருவாக்கிய பகுதி. உடல் உதிர்த்த பகுதி. அது வலியின் நினைவுகள் அனைத்தையும் தன்னுள் இழுத்துக்கொண்டு காய்ந்து சருகாகிறது. உடல் மீண்டும் பூக்க வழிசெய்கிறது.

அதுபோலவே வெங்கடேசு மீண்டும் மலர்கிறான். அதன் பிறகான அவனது வாழ்க்கையை இயற்கையே முழுவதும் எடுத்துக் கொள்கிறது. அச்சிறுவனுக்கு அவனை அறியாமலே இயற்கை ஒரு மீட்பை அளிக்கிறது. அவனுக்கு பறவைகள் மேல் தீராத மோகம் ஏற்படுகிறது. பல விதமான பறவை முட்டைகளை அவன் சேகரிக்கிறான். தேன்கொத்தி, வலயத்தான் பறவை, குயில் வகைகள், சிட்டு வகைகள், வாலாட்டிக் குருவி என்று பலவிதமான பறவைகளை பற்றி அறிந்து கொள்கிறான்.

close up of baby birds chirping in nest

திருவேதி நாயக்கர் என்னும் முதியவருடன் ஏற்படும் தோழமை அவனுக்கு பறவைகளைப் பற்றிய அறிதலை மேலும் அதிகமாக்குகிறது. திருவேதி நாயக்கர் மனைவியை இழந்தவர். மறுமணம் செய்ய அவர் விரும்பவில்லை. நாயக்கராக இருந்தாலும் அவர் தன் குல வழக்கத்தை தாண்டிய வாழ்க்கை முறைக்கு செல்கிறார். இயற்கை சார்ந்த வாழ்க்கைமுறையை கொண்டிருக்கிறார். வேட்டையாடி உண்கிறார். ஈசல் வறுத்து உண்கிறார். அத்தகைய வாழ்க்கையை அவர் ஏன் தேர்வு செய்தார்? வெங்கடேசின் இயற்கை ஆர்வம் அவரை மகிழ்வுக்குள்ளாக்குவது ஏன்? இருவரின் உள்ளமும் ஒன்றேதான். இருவரின் இழப்பையும் இயற்கை மட்டுமே நிறைவு செய்கிறது.

அவர்களின் வீட்டில் வேலை செய்யும் ஐம்பது வயதான ‘வடிவேலு’வின் மனச்சிதைவும் இந்த நாவலின் முக்கியமான பகுதிகளில் ஒன்று. வீட்டில் இருக்கும் மாடுகளின் மேய்ப்பரான அவர், தீடிரென அனைவருக்கும் வணக்கம் சொல்கிறார். அப்போதே மாற்றம் நிகழ்கிறது என்பதை எல்லோரும் கணித்து விடுவார்கள். அன்று மாலை பெரும்பாலும் மாடுகள் களைப்பாக தனியே வீடு திரும்பும். வடிவேலு காட்டில் பாடித் திரிந்து கொண்டிருப்பார். வேறு யாருக்காகவும் பாடாமல் அந்த நாட்களில் மட்டுமே தனித்து பாடுகிறார். சிறுவர்கள் அந்த பாட்டை அவருக்கு தெரியாமல் கேட்டு ரசிக்கிறார்கள். மீண்டும் தெளிந்து வேலைக்கு வரும் போது சாப்பிடச் சொல்லி காசு கொடுத்து எதுவும் நடக்காதது போல வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள். கி.ரா வின் ‘கிடை’ நாவலில் கரிசல் மண்ணின் மேய்ப்பர்களின் வாழ்க்கை குறித்து மேலும் விரிவாக எழுதியிருப்பார். மேய்ப்பனுக்கு எழும் இந்த பித்து பழங்கால ஸ்காட்லாந்து நாட்டுப்புற கதைகளிலேயே பேசப்பட்டிருக்கிறது. பித்தை அளிப்பதும் இயற்கையே. அதிலிருந்து மீட்பை அளிப்பதும் இயற்கையே.

இந்த நாவலில் கிராமத்து சிறுவர்களின் உலகம் மிக விரிவாக சொல்லப்படுகிறது. பல விதமான விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடுகிறார்கள். அதில் பெரும்பங்கு அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவி விளையாடும் வகையில் அல்லது மீண்டும் இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு விளையாடப் படுகிறது. இதில் எனக்கு மிக சுவாரஸ்யமாக இருந்தது, குழி நரிகளை (ஒரு வகைப் பூச்சி) பிடித்து அதை ஒரு இடத்தில் விட்டுச் செல்கிறார்கள், அடுத்த நாள் நிறைய ‘தரைப்பூக்கள் பூத்திருக்கும்’ என்ற ஆவலில். இத்தகைய நுணுக்கமான விளையாட்டுகள் குழந்தைகளின் கனவுகளை நிறைத்து கற்பனைகளை விரிவாக்குகிறது.

‘தரைப்பூக்கள்’

கற்பனைகள் மனதை நிறைத்து ததும்பும் அதே சமயம் அதீத பொய்யான நம்பிக்கைகள் இளம்வயதில் நம் எல்லோருக்கும் இருந்திருக்கும். அதுபோலவே, வெங்கடேசும் விலாங்கு மீன் ஊருக்குள் வந்து கோழிகளை பிடித்து உண்ணும் என்று நம்பி, தன் நண்பன் செந்தில்வேலின் அண்ணன் மோகனதாசிடம் கேட்டு அது பொய்யான நம்பிக்கை என்று உணர்கிறான். கற்பனைகளின் எல்லைகளை அறிந்து கொள்கிறான்.

இந்த செந்தில்வேல் அப்பகுதியின் மற்றொரு சமுகத்தைச் சேர்ந்தவன் என்பதை கதையில் நாம் உணர்கிறோம். வைணவ குலத்தை சேர்ந்த வெங்கடேசு, செந்தில்வேலின் விபூதி மணத்தால் கவரப்படுகிறான். விபூதி தரித்ததால் தன் தந்தையிடம் அடியும் வாங்குகிறான். செந்தில்வேல் பூசை செய்யும் காளி கோவிலின் கற்பக்கிரகத்திற்குள் சென்று காளியின் அலங்காரத்தை காண்கிறான். அது மிக அரிய அனுபவமாக அமைகிறது. அம்மனுக்கு உடை மாற்றும் போது ஒரு சிறிய உறுத்தலை அடைகிறான். செந்தில்வேலின் அண்ணன் மோகனதாஸ் ஒரு லட்சியவாத கம்யூனிஸ்ட் இளைஞனின் தோற்றத்தை கொண்டிருக்கிறான். ரஷ்ய தலைவர் ஒருவரின் (லெனின் என்று நினைக்கிறேன்) புகைப்படம் ஒன்றை சிறுவர்களுக்கு காட்டுகிறான். விமானங்கள் குறித்து பேசுகிறான். அவன் செந்தில்வேலை மீண்டும் படிக்க தூண்டுகிறான் (அம்மை நோய்க்குப் பிறகு அவன் பள்ளி செல்லவில்லை).  இந்த சித்திரம் அந்த நிலத்தின் சமூக அமைப்பு மற்றும் அந்த காலகட்டத்தில் இருந்த அரசியல் கோட்பாடு பற்றிய சித்திரத்தை ஒரு சிறார் நாவலுக்கு தேவையான அளவுக்கு மட்டுமே சரியாக அளவில் சொல்கிறது. ஒரு சிறுவனின் பார்வையில் மற்ற வாழ்க்கை முறைகளை, தனித்துவமான மனிதர்களின் மேல் வரும் ஈர்ப்பை இதில் கி.ரா தன் எளிய ஆனால் கூர்மையான விவரிப்புகளில் கடத்திச் செல்கிறார்.

இன்னும் பலவிதமான சுவாரஸ்யமான காட்சிகள், வர்ணிப்புகள், அவதானிப்புகள் கதையில் வந்து கொண்டே இருக்கின்றன. கோழிகளின் விதவிதமான ஓசைகள், மைனாவின் பேச்சு, ரயில் மனிதர், நட்டுவாக்கிலிக்கும் தேளுக்கும் உள்ள வித்தியாசம், அம்மை நோயின் போது ஏற்படும் தனிமையும் தன்னிரக்கமும், காக்காய் பிடிப்பவனின் மர்மம் என்று…ஒவ்வொன்றும் அந்த சிறுவர்களுக்கும், வாசிக்கும் நமக்கும் அனுபவமாக, படிமங்களாக மனதில் பதிகிறது.

கி.ரா வின் கதைசொல்லல் போன்ற எழுத்து தனித்துவமானது என்று அனைவருக்கும் தெரிந்ததே. அது இந்த கதையிலும் மிக அழகாக பொருந்தி வந்துள்ளது. ஆனால், பெரும்பாலும் கி.ராவின் குரல் ஒலிப்பது வெங்கடேசின் குரலை இல்லாமல் செய்கிறது. அது அந்த சிறுவனின் மனதை, அவன் கண்கள் காண்பதை எப்படி விளங்கிக் கொள்கிறது என்று பார்க்க மேலும் உதவும். அவன் அனுபவிக்கும் தனிமை, ஏமாற்றம், ஆச்சரியம், கண்டடைதல்கள் ஆகியவை அவனது குரலில் மேலும் ஆழமாக ஒலிக்கும் என்று தோன்றியது. இது குறை என்பதைத் காட்டிலும் கதையின் அடுத்தக்கட்ட சாத்தியம் என்ற வகையில் எண்ணிப்பார்க்கிறேன்.

நாவலின் இறுதியில் வெங்கடேசு பள்ளிப் படிப்பிற்காக நண்பன் அசோக்குடன் பாளையங்கோட்டைக்குச் செல்கிறான். அவன் படிக்க விருப்பம் என்று சொன்னதும் அவனுடைய அப்பா மகிழ்ந்து அனுப்பி வைக்கிறார். இயற்கை, நட்பு, நுண்மையான அனுபவங்கள் என்று நிறைந்த நாவலின் இந்த முடிவு சற்று ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால் யதார்த்தமான ஒரு முடிவு என்றும் அதை பார்க்கலாம். இச்சிறு வயதில் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவம் ஒப்புநோக்க ஒரு பட்டணமான பாளையங்கோட்டையில், பள்ளிப் படிப்பில் அவனுக்கு என்னவாக உதவும் என்று யோசிப்பது சுவாரஸ்யம் அளிக்கிறது.

’கோபல்ல கிராமம்’ நாவலில், ஒரு சமூகம் தங்கள் கடந்தகால வடுக்களை உதிர்த்தெழும் ஒரு பெரும் வரலாற்றுச் சித்திரத்தை கி.ரா அளித்திருப்பார். இந்த நாவலில் தனிமனிதர்கள் உதிர்த்தெழும் தன்மையை, அதில் இயற்கை செலுத்தும் பெரும் பங்கை உணர்த்திச் செல்கிறார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கே கலிபோர்னியா மாகாணத்தில் பல மரங்கள் வருடம்தோரும் நிகழும் காட்டுத்தீயில் கருகிய நிலையில் இருந்தது. கண்ட முதல் சமயம் ஒரு சுமையே மனதில் எழுந்தது. ஆனால் பெரும்பாலும் அவை மீண்டும் தளிர்த்துவிடும் என்றனர். ஒரு சில மரங்கள் பட்டுப் போயிருந்தாலும் அதிலிருந்து சில புதிய செடிகள் பிறந்திருந்தன. உதிர்த்தெழும் அந்த இயற்கை போலவே தான் நாமும் என்பதை கி.ரா இந்த நாவலில் சொல்வதாக தோன்றுகிறது.

Leave a Reply

Discover more from saaradhai.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading