சுசித்ரா
அன்புள்ள தன்யா,
உங்கள் கதையை வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் குரல் வெளிவந்துள்ளது. இந்தக் கதையின் அசல் நேர்நிலைத்தன்மை தான் என்னை அனைத்துக்கும் மேலாகக் கவர்ந்தது. ருது அடைதல் என்பதன் ஆழம் – intensity – அதன் பூரணம், அனைத்தையும் அந்த மருதாணியின் நிறமும் மணமும் சொல்லிவிடுகிறது. ‘அந்தி’ என்ற படிமம் அதன் கரைந்துபோகும் தன்மையை உணர்த்தியது. இவ்விரு அம்சங்களும் ஒருங்கே கூடிய கதை இது. அதுவும் தாய் சொல்கிறார். அவருடைய இயல்பான நினைவுகள், அவதானிப்புகள் இந்தக் கதையை அசல் வாழ்க்கை என்று காட்டுகிறது.
என் வாசிப்பில் அணுக்கமாக உணர்ந்த சில இடங்களைக் கூறுகிறேன். கதைசொல்லி கல்லூரி முடிந்த சமயத்தில் வைத்துக் கொண்ட மருதாணியைப் பற்றிச் சொல்கிறார். ஒருவேளை திருமணத்திற்கு முன்பான அவரது கடைசி மருதாணி. அப்படி நிறைய ‘கடைசிகள்’ கதையில். ஒவ்வொன்றாக அஸ்தமனம் ஆகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எப்பேற்பட்ட வண்ண ஆழத்தோடு, வாசத்தோடு! இந்த உணர்வை கடத்திவிட்டது உங்கள் கலை.
அப்பா மகளின் கால்களில் மருதாணி கழுவி விடும் இடமும் சரி, தாத்தா தன் கடைசி மங்கலத்தை காணும் இடமும் சரி, சன்னமாகச் சொல்லப்பட்டவை. மிக உணர்வுப்பூர்வமான தருணங்கள்.
இவற்றை அன்னை தன் மகள் ருதுவான சமயத்தில், அவள் முதல் மருதாணியில் எண்ணிக்கொள்வது, வாழ்க்கைச் சுழலின் இனிமையை உணர்த்தும் வகையில் உள்ளது.
கடைசியாக, முன்னோடி ஒருவரின் கதைக்கு ‘பதில் கதை’யாக உங்கள் முதல் கதை நிகழ்ந்துள்ளது சிறப்பான விஷயம் என்று நினைக்கிறேன். It is a great creative moment.
நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.
கடலூர் சீனு
நான் சிறு வயது முதற்கொண்டு கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவன். அதன் இயல்பின் படி, எனக்கு யார் யாரோ உணவிடுவார்கள் யார் யாரோ என்னை பராமரிப்பாளர்கள். என் அண்ணா மூத்த பிள்ளை. என்னை விடவும் சவலை பிள்ளை என்பதால் அம்மாவுக்கு அவன் மேல் பிரியம் அதிகம். இறுதி தங்கை எங்கள் குல தெய்வத்தின் வடிவம். குல தெய்வத்தின் பெயரை இட்டு சீராட்டுவார்கள். இரண்டுபேரும் அம்மாவிடம் கொண்ட நெருக்கத்தை, எனக்கு தேவை என்ன என்று சொல்ல தெரியாமல் பார்த்திருப்பேன்.
தங்கை ருது ஆனபோது அன்று அவளுக்கு சிருஷைகள் செய்த அம்மாவை கண்டேன். அது அதுவரை நானறிந்த பாசமோ வெரோன்றோ அல்ல… ஒரு அம்மா பிறர் எவருக்கும் அல்லாது மகளுக்கு மட்டுமே அளிக்க இயன்ற ஏதோ ஒன்றை அளித்துக் கொண்டிருந்தார். அன்று பாதி அனாதை ஆனேன். மிக பின்னர் என் தங்கை தனது முதல் மகளை பெற்ற போது அம்மா உடன் இருந்தார்கள். என் தங்கை அவள் மகளை தூக்கி என் அம்மாவின் கையில் கொடுத்த போது ஒன்றை கண்டேன். எவராலும் அன்றி மகளால் மட்டுமே அன்னைக்கு தர முடிந்த ஒன்றை அன்று என் தங்கை அம்மாவுக்கு தந்து கொண்டு இருந்தார். அன்று முழு அனாதை ஆனேன்.
வாழ்வு என்பது இப்படி “வகுத்து சொல்ல இயலாத” ஆனால் “அங்கே இருந்து இயக்கும்” பல நூறு தனித்துவமான நுண் விசைகளால் ஆனது.
சிறந்த எழுத்துக் கலைஞன் இந்த நுண் விசைகளிலேயே தனது முதன்மை கவனத்தை கொண்டிருப்பான்.
‘அந்தி’ சிறுகதையும் எந்த நல்ல சிறுகதையையும் போலவே பிரிதொன்று இல்லாத தனித்துவமான நுண் விசை கொண்ட உணர்வு களத்தை சித்தரிக்கிறது.
மொழியாலும் நடையாலும் உள்ள பெண்தன்மை இந்த சிறுகதையின் ஆதார பலங்களில் ஒன்று.
மருதாணி சார்ந்த அனைத்தும் எந்த மேலதிக யத்தனமும் இன்றி கலாபூர்வம் எதுவோ அது தன் அடிப்படையில் கொண்ட இயல்பாக, கதை பேசும் மையம் எதுவோ அதன் குறியீடாக மாறி விடுகிறது. இதில் இருக்கும் ஒவ்வொரு படிமங்களும் அவ்வளவு அழகு. குறிப்பாக இவள் அத்தனை கொசு கடியிலும் பல் கடித்து சகித்துக் காப்பாற்றும் மருதாணி. பிறர் பாதியில் அதை உதருவது (அதன் பின்னுள்ள வயது வாழ்வு) மருதாணியை கை கழுவும் போது அது பொருக்குகளாக உதிர்ந்து நீரில் கரைந்து மறையும் சித்திரம்.
மூக்கு குத்தி கொள்ள அவள் கொள்ளும் விழைவு, கொசு கடிகளை அதன் தினவை தாங்கும் அவளது அந்த வயதுக்கே உரிய அந்த தன்மை. ஊசிகள் போல மழை தாரைகள் குளத்தின் உடலை தைப்பதாக வரும் சித்திரம்…
தனது பரிசுத்தம் மிகுந்த, மீண்டு மறுபடியும் நிகழ வகை இல்லாத, தான் கண்டு கடந்த வாழ்வின் உணர்வு தளம் ஒன்றை, அதே களதுக்குள் அவளது மகள் நுழையும் சித்திரம். அவள் முன்பு மருதாணி உதிர்ந்து வெளியே தெரியும் முதல் சிகப்பில் முத்தமிடும் தருணம் இங்கே இப்போது இயல்பாக பொருந்தி இதற்கு வேறு அர்த்தம் தந்து விடுகிறது.
எந்த நல்ல கதையும் அதை நல்ல கதை என்றாக்கும் இரண்டு கூறுகள் இந்த கதையில் மிக இயல்பாக நிகழ்ந்திருக்கிறது.
முதலாவது அது கையாளும் தனித்துவமான வாழ்க்கை தருணம்.
இரண்டாவது அது சொல்லப்பட்ட விதம்.
இத்தனை துல்லியமான, தேவை எவ்வளவோ அவ்வளவு மட்டுமே சொல்லும் புற வயமான சித்தரிப்புகள் வழியே, முற்றிலும் abstract ஆன ஒன்றை மிக லாவகமாக sub text இல் விரிய வைத்து விடுகிறது கதை.
சின்ன சின்ன சித்தரிப்புகள் வழியே நகரும் கதை, பற்றி எரியும் வண்ணம் நிற்கும் மருதாணி செடியில் கவித்துவ உச்சத்தை எட்டி விடுகிறது. மொத்த கதையும் அங்கே அனைத்தையும் விட்டு உதறி எழுத்து பறக்க தவிக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல் தனது கால்களை கழுவிவிடும் அப்பாவின் தோள்களை பற்றியபடி அவள் வானத்தில் காணும் நகரும் நட்சத்திரங்கள்… உலகின் எந்த மொழிக்கு இக்கதை சென்றாலும் அங்கே இதன் வாசகன் இந்த இடத்தில் மனம் நெகிழாது இந்த சித்திரத்தை அவனால் கடக்க இயலாது.
கச்சிதமான Craft ஆகவும், உன்னதமான art ஆகவும் மிக சரியாக கலவையில் அமைந்த கதை இது.
தேஜஸ்
அந்தி கதை படித்தேன். ஒரு அழகான அற்புதமான கதை. அதை பற்றி சரியான வார்த்தைகளில் எழுத வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு மேலாக இதை அனுப்பாமல் யோசித்து கொண்டே இருந்தேன். அப்போது நன்பர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போட்ட இந்த படத்தை பார்த்தேன். சட்டென்று உங்கள் கதை ஞாபகத்திற்கு வந்தது. அந்த கதையின் மையத்தை மிக சரியாக சொல்லும் வரி. இருந்ததில் ஒரு சொட்டு மிச்சம். பகலின் ஒரு சொட்டு மிஞ்சும் அந்தி, கருத்த மருதானியின் ஒரு அழிய செங்கீற்று மிச்சம், விட்டு சென்ற வீடும் ஊரும் ஓரு நினைவாக மிச்சம். வளர்ந்து தாய் ஆனதும் தன் மகளில் தன்னுடைய ஒரு சீட்டை பார்க்கும் கதைக்கு அந்தி என்று சொல்லாமல் வேற எந்த பேர் பொருந்தும். சரியாக சொல்லியிருக்கேனா என்று தெரியவில்ல ஆனால் இந்த கதை மீண்டும் மீண்டும் புது திறப்புகளுடன் என் முன் நிற்கிறது.

சதாசிவன்
அன்புள்ள தன்யா,
பிரசுரமான வகையில் இது உன் முதல் கதையாக இருக்கலாம். ஆனால் உனக்குள் பொதிந்து சுழன்று கொண்டிருக்கும் கதைப் பிரவாகங்களில்,, வெளிப்பட்ட ஒரு துளி இது என்று நான் எண்ணுகிறேன்.
பகலும் அல்லாத, இரவும் அல்லாத அந்திப் பொழுது கொடுக்கும் ஒரு ரம்மியமான அசெளகரியம், சவிதாவின் தாயாரின் உணர்வுகளில் வெளிப்படுகிறது. அதை உன் வார்த்தைகள் அழகாகச் செதுக்கியிருக்கின்றன.
மகள் ருது அடைந்த நிகழ்வின் தூண்டுதலில் அம்மாவின் பின்னோக்கிய பயணத்தில் வெளிப்படும் சுவாரசியமான நினைவுகளை வாசிக்கும் போது நானே அந்தச் சூழலில் இருப்பது போல் உணர்ந்தேன்.
தாத்தா, மதுரை, பூணூல் கல்யாண நிகழ்வு, திருமண மண்டபங்களின் அந்நியமான சூழல், மருதாணி நினைவுகள் அனைத்தையும் , ஒரு அழகியல் கலந்த யதார்த்தத்துடன், நறுக்கென்று வர்ணித்திருக்கிறாய். அதிலும் பாட்டி மருதாணி இட்டுவிடும் இடம் மிக அழகு.
மருதாணி இட்டுக் கொண்ட இளம் பெண் ஒரு புதிய சூழலில் உணரும் அசெளகரியங்களும், பருவமடைந்த பெண்ணின் மனச்சூழலும் ஒத்துப் போவது போல் எனக்குத் தோன்றுகிறது. அது போன்ற நேரங்களில் மாமா, மாமி போன்றோரின் அந்நியப் பார்வைகள் அளிக்கும் கூச்சம், அப்பாவின், ஆதுரவான உதவிகள், தன் உடலை எவ்வாறு வைத்துக் கொள்வது என்கிற அவஸ்தைகள் என்று பல அம்சங்கள் இணையாக ஒத்துப் போகின்றன.
நட்சத்திரங்கள் நீரில் கரைந்து சிறு ஓடைகளாகி எங்கோ வழிந்து செல்லும் தருணம் அழகிய ஆக்கபூர்வம்.
’மருதாணி மரம் தீத்திவலையில் எரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது’- என்கிற வார்த்தைப் பிரயோகம், எனக்கென்னவோ கதையின் சிகரமாக அமைந்ததாகத் தோன்றியது. ஒரு புதிய பரிமாணத்தை ஒரு பெண் உணர்வதையும், மருதாணியால் விரல்கள் சிவந்த அவளது வாழ்வில் அடுத்த பொழுது மலர்வதைச் சொல்வது போலவும் இருந்தது அந்த வாக்கியம்.
’அந்தி’ இதமான ஒரு பயணமாக இருந்தது தன்யா.
Leave a Reply