“பெருங்கை” –அஜிதன் உரை

பாண்டிச்சேரியில் ’சிறுகதை கூடல்’ என்ற இணையவழி வாசிப்பு கூடுகையில் பிப்ரவரி மாதம் முழுக்க காதல் கதைகளை வாசித்து விவாதித்தனர். அதில் பெருங்கை கதை குறித்து பேச 8ஆம் தேதி அஜிதன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். சூம் செயலியில் நடந்த இந்த சந்திப்பில், இருபது பேர் வரை கலந்து கொண்டார்கள். பலரும் தொடர்ச்சியாக இதில் கலந்துகொள்பவர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் வாசிப்பை முன்வைத்தனர். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் (இது பதிவு செய்து வெளியிடப்படவில்லை) இறுதியில் முப்பது நிமிடம் இந்த கதையை சார்ந்து அஜி பேசியதைப் பற்றிய சிறு குறிப்பு:

தன் உரையை தொடங்கும் முன், பொதுவாக மற்றவர்கள் பேசியதில் இருந்த சிறந்தவற்றை குறிப்பிட்டு பாராட்டினார். அதோடு இத்தகைய வாசிப்பு கூடுகையில் தவிர்க்க்கப்பட வேண்டிய இரண்டு விஷயங்களையும் சுட்டிக்காட்டினார். ஒன்று, அதீத நுணுக்கங்களை கண்டுபிடித்து கதையின் மையத்தில் இருந்து விலகுவது. இரண்டாவது, சினிமா அல்லது பொது உரையாடலில் இருந்து உதாரணங்கள் கூறி கதையை எளிமையாக்குவது.

பெருங்கை’ கதையை பற்றி கூறியது:

பெருங்கை கதையின் முக்கியமான படிமமாக வரும் ‘யானை’ ஜெயமோகனின் பல்வேறு கதைகளில் பரிணாமம் அடைந்து வந்திருக்கிறது. உதாரணமாக, மத்தகம் குறுநாவலில் மூர்க்கமாக வரும் யானை, வெண்முரசில் வரும் பலவகை யானை சித்தரிப்பு ஆகியவற்றை கடந்து, கொரோனா காலகட்டத்திற்கு பிறகான இக்கதை, ஆனையில்லா ஆகிய கதைகளில் வரும் யானை எத்தனை இனிமையான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இக்கதையின் முதல் மூன்று பத்திகளே இக்கதை எத்தனை சிறந்தது என்பதை காட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில் அர்த்தம்ற்ற படிமங்கள் நிறைய பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இம்மூன்று பத்திகளில் யானை ஒரு அழகான அதே நேரம் அமானுட இருப்பாக மண்ணில் நம்முடன் இயங்கிக்கொண்டிருக்கும் பெருவிந்தை சொல்லப்படுகிறது. ஆனால், அதே சமயம் அது யதார்த்தவாதக் கதையாக மண்ணில் ஊன்றியும் நிற்கிறது.  இந்த கருத்தை ஒட்டியே நான் சமீபத்தில் பேசியிருந்தேன்.

யானையின் இருப்பு அவன் கனவில் எப்படி உருமாறி விரிகிறது என்று பாருங்கள். அவன் கேசவனை ராத்திரியாகவும், மலைகளை விட பெரியவனாகவும் கற்பனை செய்கிறான். இங்கு மூன்று நிலைகளைக் காணலாம் – பார்வை, கனவு, கற்பனை. இன்றைய இலக்கிய சிந்தனைகளில் யதார்த்தவாதத்தின் தேவை, அதன் உச்ச சாத்தியங்கள் ஆகியவற்றை குறித்து பேச வேண்டியிருக்கிறது. கேசவன் அவனது அன்றாடத்தின் பகுதியாக தினம் அவனுடன் வாழ்பவனாக இருக்கிறது. ஆனால், அதே நேரம் அது மாயமான, தெய்வீக இருப்பையும் உணர்த்துகிறது. குமரித்துறைவி நாவல் குறித்து நான் எழுதிய கட்டுரையில் இந்த கருத்தை குறித்து மேலும் விரிவாக எழுதியிருக்கிறேன் ( அந்த கட்டுரையின் இணைப்பு கீழே)

https://www.kurugu.in/2025/11/namathu-deivam-ajithan.html

பெருங்கை என்ற தலைப்பின் முக்கியத்துவம் – கேசவன் எல்லா செயல்களையும் தனது துதிக்கை வைத்தே செய்கிறான். அந்த துதிக்கைக்கு பின்னால் இருக்கும் உயிரினம் என்பது மாயமான (mystical) ஒன்று. பேரிருப்பின் கை. சூபி மரபில், ’கடவுளின் கை’ என்று கூறுவார்கள். Acting Presence – இருப்பு என்று சொல்லலாம். அத்தகைய உயரத்தை ஒரு காதல் கதையின் மூலம் ஜெயமோகன் தொடுகிறார்.

இக்கதையில் யானை கொன்று தன் தந்தை இறந்ததாக சந்திரியின் அப்பா (ஆசான்) கூறுவார். குரூரமான நீதி வழங்கும் முகமும் கருணை கொண்ட முகமும் ஒன்று தான். கடவுள் வெளிப்படும் இடம் அது.

ஜெயமோகனின் பெரிய கதைகளில் ஒரு பிரபஞ்ச சித்தரிப்பு வழங்குவார். காவிய வடிவிலான, பெரு நாவல்களில் அது இருக்கும். ஆனால், இச்சிறுகதையில் கூட அத்தகையை வெளிப்பாடு இருக்கிறது. கரியபரப்பு, உலர்ந்து அதில் எற்படும் சிறு வெட்டுகள், கருப்பை பிம்பம் என்று பல படிமங்களில் அதைக் காணலாம்.

கதையில் இருக்கும் vividness, ஆசான் பற்றிய விவரிப்புகள் மற்றும் அவருடைய கடந்த காலக் குறிப்புகள் என்று கதாபாத்திரங்களின் கூர்மையான வடிவமைப்பு ஒரு முழு உலகை கட்டமைத்துவிடுகிறது. முடிவில் ஒரு மங்கலத்தை நோக்கி செல்கிறது.

யதார்த்தவாதத்தில் மாய யதார்த்தமும் உள்ளடங்கும். மார்க்கேஸ் எழுதிய ‘A Very Old Man with Enormous Wings’ கதை மாயத்தை எதார்த்தமாக்குவது. ‘பெருங்கை’ யதார்த்தத்தை மாயமாக்குவது.

இறுதியாக, எனது சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்லி முடிக்க நினைக்கிறேன். எங்கள் மலைத்தங்குமிடத்தில் நாங்கள் யானைக்குடில் என்று அழைக்கும் ஒரு சிறு அறை உண்டு. அங்கிருந்து காட்டில் செல்லும் யானைகளைக் காணலாம், இரவில் சிலசமயம் அதன் பிளிறல் சத்தத்தையும் கேட்க இயலும். ஒரு நாள் இரவு நான் அங்கு தங்கியிருந்த போது, அதன் பிளிறல் சத்தம் கேட்டது.

யானையின் கண்கள் நம்மை ஊடுருவிப் பார்ப்பது. ஆனால் அதன் உள்ளத்தை அக்கண்கள் வழியாக நம்மால் எப்போதும் பார்க்க இயலாது. சிறிய அந்த அறைக்குள் அத்தகைய காட்டில் படுத்திருந்த போது சட்டென்று சிறைப்பட்டவனாக உணர்ந்தேன், கடவுளின் கண்கள் கொண்டு எந்த நேரமும் அது என் மன அறைக்குள் ஊடுருவ முடியும் என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டது. அதை இறை விளையாட்டு என்றும் சொல்லலாம். இந்த கதை எப்போதும் அந்த நாளை என்னுள் விரிய வைப்பது.

ஜெயமோகன்

Leave a Reply

Discover more from saaradhai.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading