
எனது தோழியின் திருமணத்திற்க்காக நானும் அஜியும் பிப்ரவரி இறுதியில் ஹைதராபாத் சென்றிருந்தோம். திருமணம் முடிந்து இரு நாட்கள் சுற்றிப்பார்க்கலாம் என்று திட்டம். சார்மினார், சலார் ஜங் அருங்காட்சியகம், சௌமகல்லா அரண்மனை, கடைத்தெருக்கள், உணவுகள் என்று எங்கள் சிறு பயனத்திலேயே ஹைதராபாத் தனது வரலாற்றுத் தொடர்ச்சியை காண்பித்த வண்ணம் இருந்தது. அசோகமித்ரன் இங்கு வாழ்ந்ததை குறித்து அஜி சொல்லிக் கொண்டிருந்தான். ஊருக்குச் சென்று 18 வது அட்சக்கோடு படிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். விரைவில் படிக்க வேண்டும்.
மத்திய (பழைய) ஹைதராபாத் மிக மிக அவசரமாக இயங்கிக் கொண்டிருந்தது. அதன் தெருக்கள் சற்று குறுகலானவை. நிறைய முத்துக் கடைகள், வளையல் கடைகள் அந்த தெருக்களை மேலும் குறுகலாக்கியது. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு இரு சக்கர வாகனங்களில் விரைகின்றனர். ஹிஜாப் அணிந்த பல பெண்கள் குழ்ந்தைகளுடன் கைகளை காண்பித்த வண்ணம் இஷ்டம் போல தெருக்களை குறுக்காக கடந்து கொண்டிருந்தனர். ரம்சான் நேரமாதலால் மேலும் பல வண்ண விளக்குகள், ஒலிப்பெருக்கிகளில் பாடல்கள், ஹலீம் வழங்கும் கடைகள் (ஹலீம், மட்டன் வைத்து செய்யப்படும் ஒரு கஞ்சி போன்ற உணவு. நோன்பு சமையத்தில் உண்பது) என்று முழங்கிக் கொண்டிருந்தது.
அருணாம்மா நாங்கள் ஹைதராபாத் செல்கிறோம் என்றதுமே ’அங்கு படே குலாம் அலி அவர்களின் சமாதி இருக்கிறது. அங்கு சென்று பார்க்க முடிந்தால் பாருங்கள். அங்கு செல்ல வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது. நீங்கள் சென்றால் சந்தோஷப்படுவேன்’ என்றார். எங்கள் பயணத்தின் கடைசி நாள் மதியத்தில் அங்கு செல்லலாம் என்று முடிவு செய்து ஆட்டோவில் சென்றோம். ஆட்டோ எங்களை ஒரு சந்துக்குள் சென்று இறக்கியது. அது ஒரு குடியிருப்பு பகுதி போல இருந்தது. அங்கு நடந்து வந்தவரிடம் விசாரித்து கபரஸ்தான் நோக்கி சென்றோம்.
தனியாக எந்த காம்பவுண்ட் சுவரும் இல்லாமல் பல வீடுகளுக்கு அருகிலேயே அந்த மயானம் விரிந்து கிடந்தது. சட்டென்று பல்லாயிரம் கபர்கள் கண்முன்னே விரிந்தது. பார்க்க பார்க்க எத்தனை சமாதிகள் என்ற விசித்திர உணர்வு ஏற்பட்டது. மத்திய ஹைதராபாத்தின் அந்த இரைச்சலுக்கு இடையே இந்த பேரமைதியான இடத்தை மனம் நம்ப மறுத்தது. 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே இந்த மயானம் இருக்கிறது. படே குலாம் அவர்களின் சமாதி புகைப்படத்தை கூகிளில் தேடினோம். அதில் இருந்த புகைப்படம் கொண்டு தேடத்தொடங்கினோம்.
அந்த இடத்தில் அழகிய ஆடொன்று அதன் காலமற்ற கண்களைக் கொண்டு ஒரு கணம் என்னை நோக்கியது. பல கபர்கள் வெறும் சமாதிகளாக தரையில் விரிந்திருந்தது. சிலவற்றிற்கு சிறிய கூடம் போல எழுப்பப்பட்டிருந்தது. தொடர்ந்த முறையான பராமரிப்பு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. ஆடு, கபர்களின் மேல் கால்களை பதித்து மெல்ல நடந்து சென்றது. அதன் பின்னால் நாங்களும் முடிந்தவரை கபர்களின் இடையில் இருக்கும் சிறு இடைவெளியில் கால் பதித்து நடக்க முயற்சித்தோம்.
மிக நீண்ட தேடலாக மனம் உணர்ந்த அந்த சில நிமிடங்களில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலைமோதின. ’இந்த இடத்திலா அந்த பெருமனிதன் உறங்குகிறான்? அரசனல்லவா அவன். முகலாய மன்னர்களுக்கு எத்தனை பெரிய சமாதிகள்? யாருமற்ற அமைதியில் தனித்து உறங்குமா இசையின் பெரும் குழந்தை?’ என் மனம் ஏனோ பதைபதைத்தது.
அஜி கைகாட்டி ‘அங்க பாரு!’ என்றான். கண்டுவிட்டோம். அதை நோக்கி செல்லச் செல்ல மனம் அமைதியானது. ஒரு சிறிய கூடத்தில் அவருடைய கபர் வைக்கப்பட்டிருந்தது. சில வாடிய ரோஜா மாலைகள் இருந்தன. அங்கு சென்றதும் தான் தெரிந்தது நாங்கள் வந்தது மயானத்தின் மறுஎல்லையில் இருந்து, கபர்களின் வழியாக. அவருடைய கபருக்கு அருகில் ஒரு வழி சென்றது. அதுதான் மயானத்தின் முறையான வாசல். இரு இசுலாமிய வயோதிகர்கள் எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். நாங்கள் இருவரும் மாறி மாறி உணர்ச்சிகரமாக அர்த்தமற்று பேசிக்கொண்டிருந்தோம்.
படே சாகிப்பை அஜியின் ’அல் கிஸா’ குறுநாவலில் தான் நான் முதன்முதலில் கண்டுகொண்டது. அந்நாவலில் உடல் நிலை சரியில்லாமல் இருந்து நீண்ட நாள் இடைவெளிக்குப் பின், அஜ்மீர் தர்காவில் மக்களின் உணர்வுப்பூர்வமான இறை நம்பிக்கைக்கு தன்னையும் தன் இசையையும் அவர் அற்பணிப்பார். கர்பலா படுகளத்தை தன் குரலின் மூலம் கண்முன்னே கொண்டுவந்து அங்கு கூடியிருக்கும் மக்களை சன்னதம் கொள்ளச் செய்துவிடுவார். நான் அவரது சில பாடல்களை கேட்கத்தொடங்கிய போது அவரது பெரும் உடலில் இருந்து வெளிவரும் குரல் அவருடையதில்லை, எங்கோ ஆழத்தில் இருந்து இவர் வாயிலாக வருவது என்றே தோன்றும். பொதுவாக எல்லோராலும் மிகவும் இனிமையான மனிதராகவே அவர் நினைவு கூறப்படுகிறார். மிகுந்த நகைச்சுவை உணர்வும், நல்ல சமையல் திறமையும் உடையவர். அவர் மக்களின் நாயகன் என்ற எண்ணமே எப்போதும் எனது மனதில் மேலோங்கியிருப்பது. அது அல் கிஸாவில் இருந்து வந்த புரிதலாக இருக்கலாம். அவரது இசை உணர்வுப்பூர்வமாக இருப்பதால் எளிய மக்கள் பலரை சென்றடைந்தது. ’தும்ரி’ என்றழைக்கப்படும் ஹிந்துஸ்தானி வகைமையில் அவர் பெரும் புகழ் பெற்றிருந்தார். அது தாளத்தை, காதல் போன்ற உணர்வுகளை மையமாக வைத்து பாடப்படுவது. நாட்டுப்புற இசைத்தன்மை அதில் சற்று அதிகம். நடன இசைவு, பாடல்வரிகள் ஆகியவற்றிற்கு அதில் பெரும்பங்கு உண்டு. இந்திய பாகிஸ்தான் பிரிவினை அவரை பெரிதும் பாதித்தது. வீட்டிற்கு ஒருவருக்கு ஹிந்துஸ்தானி இசை கற்பிக்கப்பட்டிருந்தால் இந்த பிரிவினை நடந்திருக்காது என்று அவர் நினைத்தார்.

நாங்கள் இருவரும் கபரில் எழுதியிருந்த அவரது காலகட்டத்தை பார்தோம். ப்ரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் ஒருங்கினைந்த பஞ்சாபில் பிறந்து வளர்ந்து, பிரிவினைக்குப்பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்திருக்கிறார். பின் அறுபதுகளில் இந்தியா வந்து வாழ்வில் பெரும்பகுதி மும்பையிலும், இறுதிகாலத்தில் ஹைதராபாத்திலும் இருந்திருக்கிறார். எவ்வளவு நேரம் கழிந்ததென்று தெரியவில்லை. மீண்டும் கபரையும் அதன் சுற்றத்தையும் பார்த்தோம். அவரது கபரை ஒட்டி மிகப் பெரிய மரம் வளர்ந்திருந்தது. அதன் சருகுகள் எங்கும் பரவியிருந்தன. அவரது உடல் இந்த மரத்தின் உரமாகி இருக்கும் அல்லவா? என்ற எண்ணம் தோன்றவே பெரும் விம்மல் எழுந்தது. இயற்கையுடன் இணைதல் எத்தகைய பெரும் பேறு. அது தரும் முழுமை நம் பயணம் முழுவதையும் அர்த்தப்படுத்திவிடும் அல்லவா? அவர் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பியதாக சொல்லப்படுகிறது. கர்பலாவின் மண் அங்கே கொண்டுவரப்பட்டது என்ற நம்பிக்கை இருக்கிறது. இசையின் நாயகன் இத்தகைய அமைதியான மர நிழலில் எல்லோரும் புதைக்கப்பட்டிருக்கும் அந்த பரந்த வெளியில், எப்போதும் முழங்கிக் கொண்டிருக்கும் மத்திய ஹைதராபாத்தில் உறங்குவது தான் சரி. ஏனென்றால் அவர் மக்களின் நாயகன்.


Leave a Reply