சாரதை அறிவின் தேவி. ஞானத்தின் தலைவி. (சரஸ்வதியின் இன்னொரு வடிவம்) ஆனால் காட்டில் உறையும் கரியவள். அவள் தந்திரமானவள், மறைந்திருப்பவள். அவளை தேடிக்கண்டடைபவர்களுக்கு மட்டுமெ தெரிபவள்
ஜெயமோகன்
எனது பெயர் தன்யா. நான் கோவையில் பிறந்து வளர்ந்து இப்போது சென்னையில் வசித்து வருகிறேன். கணக்கியலில் பட்டம் பெற்று வேலையில் இருக்கிறேன். சிறு வயதில் இருந்து அம்மா எனக்கு படிக்கும் பழக்கத்தை இயல்பாக கடத்தினார். அவருக்கும் எனக்கும் வார பத்திரிக்கைகளை படிக்க போட்டி உருவாகும். ஆனால் கல்லூரி முடிக்கும் வரை தீவிர இலக்கிய படைப்புகள் எதையும் நான் படித்ததில்லை. ஆனால் எப்போதும் ஒருவித வாசிப்பு உந்துதல் எனக்குள் இருந்தது. அது வேலைக்கு சேர்ந்த பின்பு உருவாகும் சுயம் சார்ந்த கேள்விகள், உருக்குலைதல்கள் வழியாக மேலும் தீவிரமடைந்தது. அப்போது கோவிட் காலமும் கூட. எனவே நான் கொஞ்சம் தேடத்தொடங்கினேன். ஆனால், எந்த திசையும் தெரியாமல் ஏதேதோ எழுத்தாளர்களின் பேட்டிகள், புத்தகப் பரிந்துரைகள் என்று பார்க்கத் தொடங்கியிருந்தேன். அப்போது சுருதி டிவியில் ஒரு விஷ்ணுபுரம் அமைப்பின் சூம் கூடுகை வெளியாகியிருந்தது. அதில் நடக்கும் விவாதங்கள் சுவாரஸ்யமாகவும் தனித்துவமாகவும் இருக்க அது என்னை மிகவும் கவர்ந்தது. நிகழ்ச்சியில் ஜெயமோகன், வெண்முரசு போன்ற சொற்கள் அதிகம் பேசப்பட்டது. ஆவலுடன் நான் கேட்டுக்கொண்டிருக்கும் போதே ஜெ அந்த கூடுகைக்கு வருகை புரிந்தார். அனைவரின் முகத்திலும் பேச்சிலும் அத்தனை பிரகாசம். யார் இவர்கள் எல்லோரும் என்ற கேள்வி என்னை ஆட்கொண்டு தேடிப்பார்த்தேன். ஜெ வின் தளத்தில் பல கதைகள் கட்டணம் இல்லாமல் இருப்பது என்னை மிகவும் பாதித்தது. அறம் கதைகள் அனைத்தையும் ஒரு மூச்சாக படித்து முடிதேன். அப்படியே தினம்தோறும் வெளிவந்து கொண்டிருந்த புனைவுக்களியாட்டுக் கதைகளையும் படிக்கத் தொடங்கி ஒரு தொடர் வாசகியாக மாறினேன். ஜெவை எனது குருவாக, எனது வாழ்க்கைத் தேடலின் வழிக்காட்டியாக நான் உணரத்தொடங்கினேன்.
2023 இன் இறுதியில் நானும் அஜிதனும் (தெரியாதவர்களுக்கு, அஜி ஜெவின் மகன்) காதலித்து 2024 பெப்ருவரியில் திருமணம் செய்து கொண்டோம். அது என் வாழ்க்கையில் நடந்த மற்றுமொரு பெரும் நிகழ்வு என்று தான் சொல்வேன். இலக்கியத்தில் அல்லது பொதுவாக கலைகளில் எனது ஆர்வம் வளர அஜியின் பங்கு மிக அதிகம். அவனது செல்வாக்கு என்னை செதுக்கிக் கொண்டிருப்பதை நான் உணர்கிறேன்.
எனது இந்த பயணம் எழுத்தை நோக்கி வாசிப்பை நோக்கி என்னை பெரிதும் நகர்த்துகிறது. ஒரு வாசகியாக நான் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது. நான் ஒரு புனைவெழுத்தாளராக என்னை முழுவதும் உணர்கிறேனா என்றும் தெரியவில்லை. ஒருவேளை எனக்கு இன்னும் சில வருடங்கள் தேவை அதை புரிந்துகொள்ள. ஆனால் நான் நினைப்பதை, உணர்வதை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த வலைத்தளம் மூலம் அந்த நம்பிக்கையை சோதித்து பார்க்கத் தொடங்கியிருக்கிறேன் 😉 தொடந்து எழுதவேண்டும் என்ற உந்துதலுக்கும் இது வழிவகுக்கும் என்று நம்புகிறேன். இதில் வாசிப்பு, விமர்சனம், பயணம், கலை சார்ந்த அனுபவங்கள், எனது வாழ்க்கை நிகழ்வுகள், எனது எண்ணங்கள் என்று பலவற்றையும் பற்றி எழுத நினைக்கிறேன். ஒரு சொந்த வலைப்பதிவு (Personal blog) வடிவில் இது அமையும். இதை வாசிப்பவர்கள் தங்கள் எண்ணங்களை என்னுடன் comment section இல் பகிர்ந்து கொள்ளலாம். கடிதங்களும் எழுதலாம் (அவற்றை பெரும்பாலும் பிரசுரிக்கும் எண்ணம் இல்லை).
மார்ச் 22, 2026